ஆஸ்திரேலிய - அமெரிக்க நாடுகளுக்கிடையிலான இணக்கப்பாட்டின் பிரகாரம் அமெரிக்காவில் குடியமர்த்தப்படவிருந்த படகு மூலம் ஆஸ்திரேலியா வந்த அகதிகளில் முந்நூறு பேர் அமெரிக்க அரசினால் நிராகரிக்கப்பட்டுள்ளார்கள்.
மனுஸ் - நவுறு தீவுகளிலிருந்து பகுதி பகுதியாக அமெரிக்காவில் கொண்டுசென்று மீள்குடியமர்த்தப்பட்டுவரும் அகதிகளில் முந்நூறு பேர் வகையிலானோரையே அமெரிக்க அரசு பல்வேறு காரணங்களினால் இவ்வாறு நிராகரித்துள்ளது.
இந்த தகவலை கூறியுள்ள ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் Peter Dutton, அமெரிக்காவின் இந்த நிராகரிப்பின் காரணமாக இந்த வருடத்துக்குள் 1250 அகதிகளை மனுஸ் - நவுறு தீவுகளிலிருந்து அமெரிக்காவில் மீள்குடியமர்த்துவது என்ற இலக்கோடு மேற்கொள்ளப்பட்டுவரும் தமது அரசின் நடவடிக்கைக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இதுவரை மீள்குடியமர்த்தப்பட்ட அகதிகள் விவரம் குறித்து அவர் மேலும் கூறுகையில் - மனுஸ் - நவுறு தீவுகளிலிருந்து இதுவரை 531 அகதிகள் அமெரிக்காவில் மீளக்குடியமர்த்தப்பட்டிருக்கிறார்கள் என்றும் மேலும் 295 அகதிகளின் விவரங்களை பரிசீலித்து திருப்தி வெளியிடப்பட்டதையடுத்து அவர்கள் அங்கு செல்வதற்கு காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அமெரிக்காவில் குடியமர்வதற்கு அரசாங்கத்தினால் பரிந்துரை செய்யப்பட்ட இந்த திட்டத்தை மனுஸ் - நவுறு தீவுகளிலுள்ள அகதிகளில் 95 பேர் நிராகரித்துள்ளார்கள் அல்லது சம்மதம் தெரிவித்துவிட்டு பின்னர் அதிலிருந்து பின்வாங்கியிருக்கிறார்கள் என்றும் Peter Dutton கூறினார்.
மனுஸ் - நவுறு அகதிகளை அமெரிக்காவில் குடியமர்த்துவதற்கு அமெரிக்கா இணக்கப்பாடு தெரிவித்துள்ளமைக்கு பதிலாக அந்நாட்டு அகதிகளை ஆஸ்திரேலியா ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று எந்தக்கடப்பாடும் கிடையாது என்றும் அது வேறு விடயம் என்றும் Peter Dutton மேலும் தெரிவித்தார்.
மேற்படி அகதிகள் மீள்குடியமர்வு திட்டம் அமெரிக்க - ஆஸ்திரேலிய முன்னாள் தலைவர்களான ஒபாமா மற்றும் Turnbull இடையில் உருவாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Share
