கடந்த வாரம் மீன்பிடி படகு மூலம் குயின்ஸ்லாந்தை வந்தடைந்த வியட்நாமியர்களை திருப்பி அனுப்பாமல், அவர்கள் உண்மையான அகதிகளா என்பதை அடையாளம் காண்பதற்கான சரியான நடைமுறைகளை ஆஸ்திரேலியா கையாள வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பு குழு-Human Rights Watch அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
2015ம் ஆண்டு படகு மூலம் ஆஸ்திரேலியா நோக்கிவந்த வியட்நாமியர்களை திருப்பி அனுப்பியபோது, அவர்கள் சொந்தநாட்டில் துன்புறுத்தல்களை எதிர்கொண்டதாக சுட்டிக்காட்டியுள்ள மனித உரிமை கண்காணிப்பு குழு, அதேபோன்ற தவறை ஆஸ்திரேலியா மீண்டும் செய்யக்கூடாது என தெரிவித்துள்ளது.
இதேவேளை கடந்த வாரம் மீன்பிடி படகு மூலம் குயின்ஸ்லாந்தை வந்தடைந்த 17 வியட்நாமியர்களும் கிறிஸ்மஸ் தீவுக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் அனைவரும் குயின்ஸ்லாந்திலிருந்து கிறிஸ்மஸ் தீவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களது தஞ்சக்கோரிக்கை விண்ணப்பங்கள் அங்கு வைத்து பரிசீலிக்கப்படவுள்ளதாகவும் Refugee Action Coalition-ஐ மேற்கோள்காட்டி The Guardian செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை குயின்ஸ்லாந்தின் வடக்கு Cape Kimberley பகுதியில் கரையேறிய மீன்பிடி படகொன்றிலிருந்து வெளியேறிய 17 பேரும் முதலைகள் இருக்கும் Daintree காடுகளுக்குள் ஒளிந்துகொண்டதையடுத்து, ஆஸ்திரேலிய கரையோர காவல் படையினர் மோப்பநாய்கள் சகிதம் பாரிய தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு இவர்கள் அனைவரையும் கைதுசெய்திருந்தனர்.
இவர்கள் அனைவரும் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்தவர்களா அல்லது மீனவர்கள் என்ற போர்வையில் ஆஸ்திரேலியா வந்த புகலிடக்கோரிக்கையாளர்களா என்பது தொடர்பில் ஆரம்பத்தில் குழப்பம் நிலவிய பின்னணியில், ஆஸ்திரேலியாவிற்குள் 1400 நாட்களுக்குப் பின்னர் பிரவேசித்த முதலாவது புகலிடக்கோரிக்கையாளர் படகு இதுவென உள்துறை அமைச்சர் Peter Dutton தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
