குயின்ஸ்லாந்து எல்லையை நாளை வியாழக்கிழமை திறக்காவிட்டால் மாநிலத்தின் Premier Annastacia Palaszczuk-க்கு எதிராக நீதிமன்றம் போகப்போவதாக One Nation கட்சி செனட்டர் Pauline Hanson அறிவித்துள்ளார்.
கொரோனா தொற்று ஆபத்தினை அடுத்து நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட அவசரகால நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக குயின்ஸ்லாந்து அரசும் தனது எல்லைகளை மூடியிருந்தது.
ஆனால், அதற்கு அரசியல் தரப்புக்களிலிருந்து பலத்த எதிர்ப்பு வெளியிடப்பட்டிருந்தது.
தற்போது குயின்ஸ்லாந்தின் ஆளும் லேபர் முன்னணிக்கு எதிராக கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ள Pauline Hanson, எல்லைகளை மூடிவைத்திருப்பதால் மாநிலத்தின் சுற்றுலாத்துறை மிகப்பெரியளவில் பாதிக்கப்பட்டிருப்பதுடன் பல்வேறு தொழிற்துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.
மாநிலத்தின் எல்லைகளை மூடியுள்ளதானது சட்டவிரோதமானது என்று தெரிவித்து குயின்ஸ்லாந்து Premier Annastacia Palaszczuk-க்கு கடிதம் அனுப்பியுள்ள செனெட்டர் Pauline Hanson, நாளை வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு முன்னர் எல்லைகளை திறக்காவிடின் சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக இந்த சட்ட மிரட்டலை நிராகரித்திருந்த Premier Annastacia Palaszczuk , மருத்துவ அதிகாரிகளின் அறிவுரைக்கமையவே தான் செயற்படுவதாக கூறியிருந்தார்.
உங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தால் உங்களது மருத்துவரையோ அல்லது 1800 020 080 என்ற இலக்கத்தையோ அழையுங்கள்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
