ஆஸ்திரேலியாவில் வாழும் ஒருவர், Permanent residency எனப்படும், நிரந்தர வதிவிட உரிமை கிடைத்து 8 வருடங்களின் பின்னரே, குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் வகையில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டுமென வலியுறுத்தி, நாடாளுமன்றில் சட்ட முன்வடிவு ஒன்று சமர்பிக்கப்பட்டுள்ளது.
One Nation கட்சி செனட்டர் Pauline Hanson, இத்தனிநபர் சட்ட முன்வடிவை, நாடாளுமன்றில் அறிமுகப்படுத்தியுள்ளார்.
ஆஸ்திரேலிய குடியுரிமை பெற விரும்புபவர்கள், தாம் எவ்வித குற்றச்செயல்களிலும் ஈடுபடாதவர்கள் என்பதை நிரூபிப்பதற்கும், ஆஸ்திரேலியாவுக்கு நேர்மையாக இருக்கிறார்கள் என்பதைக் காட்டுவதற்கும், 8 வருடங்கள் வரை காத்திருந்து குடியுரிமை பெறவேண்டுமென Pauline Hanson தெரிவித்துள்ளார்.
வாக்களிப்பதற்கான உரிமை மட்டுமே, குடியுரிமைக்கும் நிரந்தர வதிவிட உரிமைக்கும் இடையிலான வித்தியாசம் எனத் தெரிவித்துள்ள அவர், நிரந்தர வதிவிட உரிமையுடன் ஒருவர் 8 வருடங்கள் வரை காத்திருப்பதில் என்ன தவறு எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
நிரந்தர வதிவிட உரிமை பெற்றபின்னர், ஒரு ஆண்டு நாட்டில் வாழ்ந்தால் அவர்கள் குடியுரிமை பெற தகுதி பெறுவர் எனும் தற்போதைய நிபந்தனையை மாற்றி, ஒருவர் வதிவிட உரிமையுடன் நான்கு ஆண்டுகள் நாட்டில் வாழ்ந்திருந்தால் மட்டுமே குடியுரிமை பெற முடியும் என்பதுடன், ஆங்கிலப்புலமையை நிரூபித்தல், பிற சமூகத்தோடு இணைந்து வாழப் பழகியிருத்தல், ஆஸ்திரேலிய விழுமியங்களை ஏற்றல் போன்ற பல புதிய மாற்றங்களைக் கொணடுவர அரசு முனைந்துவரும் பின்னணியில், Pauline Hanson-இன் இச்சட்ட முன்வடிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
எனினும் எதிர்கட்சியான லேபர்கட்சி மற்றும் கிரீன்ஸ் கட்சி உள்ளிட்டவை குடியுரிமைச் சட்ட மாற்றத்திற்கு எதிரான நிலைப்பாட்டினைக் கொண்டிருப்பதால், Pauline Hanson-இன் சட்ட முன்வடிவுக்கு செனட் அவை அனுமதியளிக்காது என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
Share
