தொண்டு நிறுவனங்கள் மற்றும் லாப நோக்கமற்ற சமூக அமைப்புக்கள் என்ற பெயர்களில் இயங்கும் ஸ்தாபனங்களை பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் வாய்ப்பு ஆஸ்திரேலியா உட்பட தெற்காசிய பிராந்தியத்தில் தெடர்ந்தும் அதிகமாகவே உள்ளது என்று ஆஸ்திரேலிய பரிவர்த்தனை ஆய்வு மற்றும் அறிக்கை மையம் (AUSTRAC - Australian Transaction Reports & Analysis Centre ) என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
'ஆஸ்திரேலியாவில் தொண்டுநிறுவனங்கள் என்ற பெயரில் பயங்கரவாத இயக்கங்களுக்கு பணம் சேர்த்து அனுப்பும் அமைப்புக்கள் மற்றும் பயங்கரவாத அமைப்புக்களுடன் சேர்ந்து இயங்கும் சந்தேகத்துக்குரிய தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றை ஆஸ்திரேலியா இனங்கண்டுள்ளது. முக்கியமாக IS போன்ற அமைப்புக்களுடன் இணைந்து இயங்குபவை என்ற சந்தேகத்துக்குரிய தொண்டு நிறுவனங்களை ஆஸ்திரேலியா அறிந்துள்ளது' - என்று AUSTRAC தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் இயங்கும் இப்படியான லாபநோக்கமற்ற தொண்டு நிறுவனங்களின் மொத்த சொத்து மதிப்பு 275 பில்லியன் டொலர்கள் என்று AUSTRAC சுட்டிக்காட்டியுள்ளது.
'அண்மையில் இவ்வாறான இரண்டு ஆஸ்திரேலிய தொண்டு நிறுவனங்களுக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் பயங்கரவாத ஒழிப்பு அமைப்புக்கள் நடவடிக்கை எடுத்திருந்தன. இதுபோன்ற தொண்டு நிறுவனங்களால் பயங்கரவாத அமைப்புக்களுக்கு சந்தேகத்துக்குரிய 27 பணப்பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததையும் இந்த அமைப்புக்கள் கண்டுபிடித்துள்ளன'- என்று AUSTRAC கூறுகிறது.
தொண்டு நிறுவனங்கள் மூலம் உள்நாட்டில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பணம் சேகரிப்பதென்பது ஆஸ்திரேலியாவைப்பொறுத்தவரை அறவே இல்லை என்று கூறுமளவுக்கு காணப்பட்டாலும்கூட, இந்த ஆபத்திற்கான தரவரிசையில் தெடர்ந்தும் "மத்திமம்" என்ற நிலையிலேயே ஆஸ்திரேலியா காணப்படுவதாக இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
தொண்டுநிறுவனங்கள் என்ற போர்வையில் ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்பில் உள்ள அமைப்புக்கள் அநேகமாக வீட்டுநிர்மாணம், சமூக சேவைகள், கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளுடன் சம்பந்தப்பட்டவையாகவே காணப்படுகின்றன என்றும் - இந்தமாதிரியான அமைப்புக்கள் பொதுமக்கள் பணத்தையே பிரதான வருவாயாக கொண்டிருப்பவையாகவும் ஒரு குறிப்பிட்ட சமூகம் பயனடைவதற்காக மாத்திரம் இந்த நாட்டில் இயங்குபவையாகவும் பிரதான நகரங்களில் செயற்படுகின்றவையாகவும் காணப்படுவதாக AUSTRAC தெரிவித்துள்ளது.
தெற்காசிய பிராந்தியத்தில் மாத்திரம் சுமார் 8 லட்சத்து 90 ஆயிரம் தொண்டுநிறுவனங்கள் இயங்குகின்றன என்றும் இந்தோனேஷியாவில் மாத்திரம் 3 லட்சத்து 37 ஆயிரம் அமைப்புக்கள் உள்ளன என்றும் இந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
