ஐஎஸ் அமைப்புடன் சேர்ந்தியங்கிய 5 ஆஸ்திரேலியர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் இனிமேல் ஆஸ்திரேலியா திரும்ப முடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியக் குடியுரிமை உட்பட இரட்டைக் குடியுரிமை கொண்ட இந்த ஐந்து பேரும் மத்திய கிழக்கில் தீவிரவாதச் செயற்பாட்டில் ஈடுபட்டதன் மூலம் ஆஸ்திரேலியாவின் விழுமியங்களுக்கு எதிராக செயற்பட்ட காரணத்தினால் தாம் இந்த முடிவினை எடுத்துள்ளதாக உள்துறை அமைச்சர் Peter Dutton தெரிவித்தார்.
20 மற்றும் 30 வயதுகளில் இருக்கும் ஐந்து பேருடைய குடியுரிமையே இவ்வாறு பறிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றபோதிலும் இவர்களது பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை.
குறித்த 5 பேருடைய குடியுரிமைகளை ரத்துச் செய்யும் செயற்பாடு கடந்த வருடம் முதல் மேற்கொள்ளப்பட்டுவந்ததாகத் தெரிவித்த Dutton, எதிர்காலத்திலும் இன்னும் சிலர் குடியுரிமையை இழக்க நேரிடும் எனத் தெரிவித்தார்.
இதேவேளை தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் Khaled Sharrouf என்ற நபரின் ஆஸ்திரேலியக் குடியுரிமை முன்னதாக பறிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
