வெளிநாடுகளிலிருந்துகொண்டு ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் ஓய்வூதியம் பெறுபவர்கள் அடுத்தவருடம் முதல் தாங்கள் உயிரோடிருப்பதை இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை ஆஸ்திரேலிய அரசுக்கு உறுதிப்படுத்தவேண்டும் என்ற புதிய நடைமுறை கொண்டுவரப்படவுள்ளது.
வெளிநாடுகளில் இருந்துகொண்டு ஆஸ்திரேலிய ஓய்வூதியம் பெறுகின்ற இவ்வாறானவர்கள் இறந்த பின்னரும் அவர்களுக்குரிய ஓய்வூதியத்தை அரசாங்கம் தொடர்ந்து அனுப்பிவந்திருப்பது கண்டறியப்பட்டதைத்தொடர்ந்து அடுத்த வரவு செலவுத்திட்டம் முதல் இந்த மாற்றம் கொண்டுவரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூக சேவைகள் அமைச்சர் Paul Fletcher இது தொடர்பாக கூறும்போது - சுமார் ஒரு லட்சம் ஆஸ்திரேலியர்கள் வெளிநாடுகளிலிருந்துகொண்டு அவர்களுக்குரிய ஓய்வூதியத்தை பெற்றுவருகிறார்கள். ஆனால், இவர்களில் உயிரோடிருப்பவர்கள் தொடர்பாக அரசாங்கம் எந்த சோதனைகளும் செய்துகொள்ளாமல் கிட்டத்தட்ட இறந்துபோன ஆறாயிரம் பேரின் கணக்குகளுக்கு தொடர்ந்தும் ஓய்வூதியத்தை அனுப்பிக்கொண்டிருந்தது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. ஓய்வூதியம்பெறுவர்கள் இறந்துபோனால் அவர்களது உறவினர்கள் அறிவித்தால் அவர்களது ஓய்வூதியம் நிறுத்தப்படும் என்ற நடைமுறையே கடந்த காலங்களில் பின்பற்றப்பட்டுவந்திருக்கிறது. ஆனால், இந்த நடைமுறையினால் பெருந்தொகையான அரச பணம் கடந்தகாலங்களில் வீணடிக்கப்பட்டிருக்கிறது. இப்படியான விரயத்தை சரியான நடைமுறையின் கீழ் கொண்டுவந்தால் எதிர்வரும் நான்கு வருடங்களில் சுமார் 150 மில்லியன் நிதியை அரசு சேமித்துக்கொள்ளமுடியும் - என்று கூறியுள்ளார்.
இதன் முடிவாக, அடுத்தவருடம் முதல் வெளிநாட்டிலிருந்து ஓய்வூதியம் பெறுபவர்கள் இரண்டு வருடத்துக்கு ஒரு தடவை தாங்கள் உயிரோடிருப்பதை அரசுக்கு உறுதிப்படுத்தவேண்டும் என்றும் இந்த புதிய அறிவிப்பு எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் சகலருக்கும் கடிதம் மூலம் அனுப்பிவைக்கப்படும் என்றும் அமைச்சர் Paul Fletcher கூறியுள்ளார்.
Share
