மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில் புதிதாக சமூக பரவல் ஊடாக ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து பெர்த், Peel மற்றும் southwest பகுதிகளில் இன்று மாலை 6 மணி முதல் 5 நாட்களுக்கு முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு, மருத்துவ பராமரிப்பு பெற, உடற்பயிற்சி மற்றும் வேலை ஆகிய நான்கு காரணங்களுக்காக மட்டுமே மக்கள் வீடுகளைவிட்டு வெளியேற முடியும். மேலும் மக்கள் வீடுகளைவிட்டு வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும்.
வெளிநாட்டிலிருந்து திரும்பிவருபவர்கள் தனிமைப்படுத்தப்படும் ஹோட்டலில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த 20 வயது இளைஞர் ஒருவருக்கே கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த நபர் பணிபுரிந்த ஹோட்டலில் பிரிட்டனில் பரவியுள்ள புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவருக்கும் அந்த வைரஸ் தொற்றியிருப்பதற்கான வாய்ப்பே அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நோய் அறிகுறிகள் ஏற்பட்ட நாளிலிருந்து அவர் பணிக்கு சமூகமளிக்கவில்லை எனவும் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மேற்கு ஆஸ்திரேலிய Premier Mark McGowan தெரிவித்தார்.
இதேவேளை குறித்த இளைஞர் மற்றுமொரு பகுதிநேர வேலையாக ride share ஓட்டுநராகவும் பணிபுரிந்திருப்பதாகவும் நோய் அறிகுறிகள் தோன்றிய நாளிலிருந்து அவர் அந்தப் பணியிலும் ஈடுபட்டிருக்கவில்லை எனவும் Premier Mark McGowan தெரிவித்தார்.
மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில் சுமார் 10 மாதங்களின்பின் சமூகப் பரவல் ஊடாக கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
