ஆஸ்திரேலியர்களுக்கான கொரோனா தடுப்பூசி கட்டம்கட்டமாக வழங்கப்பட்டுவரும் நிலையில் 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு AstraZeneca தடுப்பூசியைவிட Pfizer தடுப்பூசியே விரும்பத்தக்கது என அறிவிக்கப்பட்டுள்ளது.
AstraZeneca தடுப்பூசியின் மிக அரிதான பக்கவிளைவாக ரத்தக் கட்டிகள் ஏற்படக்கூடும் என்று ஐரோப்பிய மருந்துகள் ஆணையம் தெரிவித்துள்ளதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவ்வறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பினை ஆஸ்திரேலியாவின் தலைமை மருத்துவ அதிகாரி Paul Kelly, இன்று இரவு நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் வெளியிட்டார்.
இதன்படி 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு Pfizer தடுப்பூசியை வழங்குமாறும், ஏற்கனவே AstraZeneca தடுப்பூசியின் முதல் dose-ஐ போட்டுக்கொண்டு அதனால் எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்பட்டிராதவர்கள்(50 வயதுக்கு உட்பட்டவர்கள்) அதன் இரண்டாவது dose-ஐ போட்டுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் AstraZeneca தடுப்பூசி கொண்ட 40 வயதுகளிலுள்ள நபர் ஒருவருக்கு இரத்த உறைவு ஏற்பட்டிருந்ததையடுத்து இத்தடுப்பூசியின் பக்கவிளைவு குறித்த வாதபிரதிவாதங்கள் அதிகரித்திருந்தன.
இதுதொடர்பில் ஐரோப்பிய மருத்துவக்குழுவுடன் Australian Technical Advisory குழு நீண்ட நேரம் கலந்துரையாடியதன் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தலைமை மருத்துவ அதிகாரி Paul Kelly தெரிவித்தார்.
ஆனால் இவ்வாறான பக்கவிளைவுகள் மிக மிக அரிதாக ஏற்படுகின்ற ஒன்று எனவும் இத்தடுப்பூசியின் பலனோ மிக அதிகம் எனவும் அவர் வலியுறுத்தினார்.
அதேநேரம் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் AstraZeneca தடுப்பூசியைப் தொடர்ந்து போட்டுக்கொள்வதில் எந்தச் சிக்கலும் இல்லை எனவும் Paul Kelly தெரிவித்தார்.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
Share
