மெல்பேர்ன் அரச போக்குவரத்து வாகனங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பொதுமக்களை இலக்கு வைத்து திட்டமிட்ட பகல்திருட்டில் ஈடுபட்டுவந்தவர்கள் என நம்பப்படும் கும்பல் ஒன்றை மெல்பேர்ன் பொலீஸார் கைதுசெய்துள்ளனர்.
கடந்த இரண்டு மாதங்களாக மெல்பேர்னின் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்களிடம் பிக் பொக்கெட் அடித்துவந்த இந்த திருட்டுக்கும்பலில் இலங்கையை சேர்ந்த ஐவரும் இந்தியாவை சேர்ந்த இருவரும் அடங்குவர் என்று பொலீஸார் தெரிவித்துள்ளனர். இவர்களில் மூவர் பெண்கள் என குறிப்பிடப்படுகிறது.
மெல்பேர்ன் நகரின் மத்தியில் ரயில் - ட்ராம் வண்டிகளில் பயணம் செய்யும் பயணிகள் மற்றும் பெரிய பெரிய அங்காடிகளில் பொருட்கள் கொள்முதல் செய்வதற்கு போகின்றவர்கள் ஆகியோரை இலக்குவைத்து இந்தக்கும்பல் கடந்த இரண்டு மாதங்களாக தங்கள் கைவரிசையை காண்பித்துவந்துள்ளதாக பொலீஸார் கூறியுள்ளனர்.
இலங்கை மற்றும் இந்தியாவை சேர்ந்த இந்த திருட்டுக்கும்பலில் நால்வர் கடந்த வியாழக்கிழமை Sunshine மற்றும் Tarneit பிரதேசங்களில் கைது செய்யப்பட்டார்கள் என்றும் மிகுதி மூவரும் கடந்த செவ்வாயன்று காலை Albion பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார்கள் என்றும் பொலீஸார் மேலும் தெரிவித்தனர்.
மெல்பேர்ன் மஜிஸ்ரேட்டில் முன்னிலைப்படுத்தப்பட்டு அடுத்த ஏப்ரல் 14 ஆம் திகதிவரை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள இவர்கள் ஏழுபேரையும் தண்டனைக்காலம் முடிவடைந்த பின்னர் சொந்தநாட்டுக்கு திருப்பி அனுப்புவது குறித்து Boarder Force பரிசீலிக்கக்கூடும் என்று பொலீஸார் எதிர்பார்க்கிறார்கள்.
பொதுமக்கள் ஒவ்வொரு நாளும் தங்கள் இயல்புவாழ்க்கையில் நிம்மதியாக ஈடுபடுவதற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் யார் செயற்பட்டாலும் அவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர். இதன் அடிப்படையில் - பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை உறுதிசெய்யும் வகையில் - பொலீஸார் மேற்கொண்ட நடவடிக்கையில்தான் இந்த திருட்டுக்கும்பல் அகப்பட்டது -என்று பொலீஸார் மேலும் கூறியுள்ளார்கள்.
