எரிபொருள் விலையேற்றம்: ஆஸ்திரேலியர்களை “தங்களால் முடிந்த பங்களிப்பை செய்யுமாறு" பிரதமர் வலியுறுத்தல்

எரிபொருள் பற்றாக்குறையை சமாளிக்க ஆஸ்திரேலியர்கள் எவ்வாறு உதவலாம் என்பதை பிரதமர் Anthony Albanese விளக்கியுள்ளார்.

A close up shot of Anthony albanese in a black suit

The prime minister has delivered an address to the nation, calling for Australians to 'help each other' as petrol and diesel prices spike. Source: AAP / Mick Tsikas

மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போரால் உருவான “நிச்சயமற்ற நிலையில்” ஆஸ்திரேலியர்கள் “தங்களால் முடிந்த பங்களிப்பை செய்ய வேண்டும்” என நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் பிரதமர் Anthony Albanese வலியுறுத்தியுள்ளார்.

புதன்கிழமை மாலை 7 மணிக்கு நாடு முழுவதும் ஒளிபரப்பப்பட்ட இந்த மூன்று நிமிட உரை முன்கூட்டியே பதிவு செய்யப்பட்டதாகும். Hormuz நீரிணை வழித்தடம் தடைப்பட்டுள்ளதால் ஏற்பட்ட பொருளாதார தாக்கங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்த உரை ஆற்றப்பட்டுள்ளது.

உலகளாவிய எரிபொருள் விநியோக சங்கிலி பாதிப்பால் கச்சா எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ளன. இதனால் மக்கள் பீதியடைந்து எரிபொருளை வாங்குவதால் சில பகுதிகளில் உள்ளூர் அளவில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

அதேவேளை இந்த நிலையை “அவசரநிலை” என வரையறுக்க பிரதமர் மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரிதாக ஆற்றப்படும் தேசிய உரை முறையை பயன்படுத்தி பிரதமர் Anthony Albanese ஆஸ்திரேலியர்களை அணுகியிருந்தார். இத்தகைய உரைகள் பொதுவாக முக்கிய தேசிய முடிவுகள் அல்லது அவசரநிலைகளில் மட்டுமே வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய சூழ்நிலையில் மக்கள் நேர்மறையாக இருப்பது சிரமமாக இருக்கும் என்பதை ஒப்புக்கொண்ட பிரதமர், மத்திய கிழக்கில் நடைபெறும் போர், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் வரலாறு காணாத உயர்வை ஏற்படுத்தியுள்ளதாகவும், ஆஸ்திரேலியா அந்த போரில் நேரடியாக ஈடுபடாதபோதிலும் அதன் தாக்கத்தை அனைத்து குடிமக்களும் எதிர்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த உரையில் புதிய அறிவிப்புகள் எதுவும் இடம்பெறவில்லை. முந்தைய நாட்களில் அறிவிக்கப்பட்ட நடவடிக்கைகளையே பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார். இதில் தேசிய எரிபொருள் பாதுகாப்புத் திட்டம், மூன்று மாதங்களுக்கு லிட்டருக்கு 26.3 cents fuel excise-எரிபொருள் வரி குறைப்பு, மேலும் கனரக வாகனங்களுக்கான சாலை பயன்பாட்டு கட்டண தளர்வு ஆகியவை அடங்கும்.

இதேவேளை ஈஸ்டர் விடுமுறைப் பயணத் திட்டங்களைத் தொடருமாறு ஊக்குவித்த அவர், தேவையற்ற எரிபொருள் சேமிப்பை தவிர்க்குமாறும், வழக்கம்போல் மட்டுமே எரிபொருளை நிரப்புமாறும் கேட்டுக்கொண்டார். சமூகத்தில் உள்ள மற்றவர்களை — குறிப்பாக கிராமப்புறங்கள் மற்றும் முக்கிய சேவை துறைகளில் உள்ளவர்களை — கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.

அடுத்த சில வாரங்களுக்கு முடியுமானவரை ரயில், பேருந்து அல்லது டிராம் போன்ற பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துமாறும் அவர் அறிவுறுத்தினார்.

பொருளாதார அதிர்வுகள் இன்னும் பல மாதங்கள் நீடிக்கக்கூடும் என எச்சரித்த பிரதமர் Albanese , நிலைமை மேலும் மோசமடைந்தால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படும் என குறிப்பிட்டார். ஆனால் அவை குறித்து விரிவான விளக்கம் வழங்கப்படவில்லை.

அதேவேளை உடனடி எரிபொருள் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படுவதற்கான சாத்தியம் இல்லை எனவும் அதற்குப் பதிலாக, தன்னார்வ அடிப்படையிலான ஒத்துழைப்பையே அரசு முன்னிறுத்துகிறது எனவும், நிலைமை தொடர்ந்து மாறிக்கொண்டிருப்பதாகவும், அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன..

அவசரநிலைகளில் மட்டுமே ஆற்றப்படும் தேசிய உரை

இந்த உரை, பொதுவாக தேசிய அவசரநிலைகள் அல்லது முக்கிய திருப்புமுனைகளில் மட்டுமே பயன்படுத்தப்படும் அரிதான தொடர்பாடல் முறையாகும்.

முன்னாள் பிரதமர் Scott Morrison 2020 மார்ச் மாதத்தில் COVID-19 பரவலின் ஆரம்பத்தில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

அதற்கு முன்பு, முன்னாள் பிரதமர் Kevin Rudd 2009ஆம் ஆண்டு Stolen Generations தொடர்பாக தேசிய மன்னிப்பு உரையை வழங்கினார்.

மேலும் முன்னாள் பிரதமர் John Howard 2003ஆம் ஆண்டு ஈராக் போரில் ஆஸ்திரேலியா பங்கேற்கும் முடிவை அறிவிக்க இதே முறையை பயன்படுத்தினார்.

இந்த பின்னணியில், தற்போதைய உரை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தருணமாக பார்க்கப்படுகிறது.

SORRY CANBERRA KEVIN RUDD
In 2009, then-Prime Minister Kevin Rudd delivere a long-awaited apology, saying sorry for "profound grief, suffering and loss" inflicted on generations of indigenous men and women. Source: AAP / Alan Porritt

ஆஸ்திரேலியா தற்போது நான்கு கட்டங்களைக் கொண்ட தேசிய எரிபொருள் எதிர்வினைத் திட்டத்தின் இரண்டாம் நிலை (Level 2)யில் உள்ளது. தேவை அதிகரித்துள்ளதால் விலைகள் உயர்ந்துள்ளபோதிலும், எரிபொருள் விநியோகம் நிலையாகவே உள்ளது என அரசு பொதுமக்களுக்கு உறுதியளித்து வருகிறது.

ஆஸ்திரேலியாவின் தற்போதைய நிலைப்பாடு மற்றும் பொருளாதார மந்தநிலை (recession) உருவாகும் சாத்தியம் குறித்த மேலும் கேள்விகளுக்கு, National Press Clubஇல் வியாழக்கிழமை Anthony Albanese பதிலளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.

To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection. Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand


4 min read

Published

Updated

By Ewa Staszewska

Presented by Renuka Thuraisingham

Source: SBS




Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now