இதுவரை, மானுஸ் தீவிலுள்ள தடுப்புமுகாமிலிருந்த சுமார் 600 அகதிகளில் 84 பேர் ஆஸ்திரேலிய பிரதமர் Malcolm Turnbull மற்றும் முன்னாள் அமெரிக்க அதிபர் Barack Obamaவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், மீள்குடியேற அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஆனால், மீதமுள்ள அகதிகளில் பலர் அமெரிக்காவில் குடியமர்த்தப்பட மாட்டார்கள் என, பப்புவா நியூ கினியின் குடிவரவு அமைச்சர் Petrus Thomas மற்றும் அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் அஞ்சுகின்றனர்.
அகதிகளை பப்புவா நியூ கினியில் குடியமர்த்தும் முயற்சிகள் பெரிதும் தோல்வியடைந்ததாக Petrus Thomas தெரிவித்தார்.
"நாம் அவர்களை இங்கிருந்து விரைவில் வெளியேற்ற விரும்புகிறோம், ஏனென்றால் மானூஸ் தீவிலுள்ள அகதிகள் உண்மையில் வெளியேற விரும்புகிறார்கள், நாங்கள் அவர்களை வெளியேற்ற விரும்புகிறோம், ஆனால் அவர்கள் மூன்றாம் நாட்டில் குடியேறுவதை ஆஸ்திரேலியா உறுதிப்படுத்த வேண்டும்" என்று அவர் சொன்னார்.
அகதிகளை பப்புவா நியூ கினியில் குடியேற்றுவது என்று தான் ஆஸ்திரேலியாவுக்கும் பப்புவா நியூ கினி அரசுக்குமிடையிலான இடையேயான உடன்படிக்கை வரையப்பட்டது. ஆனால், அகதிகள் பப்புவா நியூ கினியில் குடியேற விரும்பாத போது, அவர்களை மீள்குடியேற்றும் பொறுப்பை ஆஸ்திரேலியா ஏற்க வேண்டும் என்று Petrus Thomas வலியுறுத்துகிறார்.
"மூன்றாவது நாட்டில் அவர்களை மீள்குடியேற்ற ஆஸ்திரேலியா ஆவன செய்ய வேண்டும்" என்றார் அவர்.
புதிய மீள்குடியேற்ற நாடுகளைத் தாம் கருத்தில் கொள்வதாக பப்புவா நியூ கினியின் தலைநகருக்குச் சென்றுள்ள ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் Julie Bishop கூறினார்.
அப்படி, ஆஸ்திரேலியாவிற்கு வெளியிலுள்ள தடுப்பு முகாம்களில் இருந்து அகதிகளைக் குடியமர்த்த ஒப்புக் கொண்டிருக்கும் ஒரே நாடு கம்போடியா என்று அவர் கூறினார்.
"கம்போடிய பிரதமரை சமீபத்தில் நான் சந்தித்தேன், அவர்களுடனான பேச்சுவார்த்தை தொடர்கிறது. அகதிகளை கம்போடியா செல்லும்படி கட்டாயப்படுத்த முடியாது, அவர்களாக விரும்பியே செல்ல முடியும்" என்று அவர் மேலும் கூறினார்.
இதே வேளை, நூற்றுக்கும் மேற்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் பாப்புவா நியூ கினியா அரசாங்கம் தமது புகலிடக் கோரிக்கையைப் பரிசீலிப்பதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்கள். வேறு சிலர் அவர்களது சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்பட முடியாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.