சட்ட விரோதமான வகையில் சேவல் சண்டைப்போட்டி நடத்துவதற்காக அடைத்துவைக்கப்பட்டிருந்த சுமார் 540 சேவல்கள் சிட்னி பொலீஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.
சேவல் சண்டைக்காக பயன்படுத்தப்படவிருந்த வேறுபல சாதனங்களும் பொலீஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
விலங்குகளுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் நடத்தப்படுகின்ற கொடூரமான நிகழ்வாகக் கருதப்படும் சேவல் சண்டைப்போட்டியை, பந்தயத் திருவிழாவாக ஏற்பாடு செய்து அதன் மூலம் பணமீட்டுகின்ற கும்பல்களை இலக்கு வைத்து சிட்னியில் பொலீஸார் மேற்கொண்டுவரும் தொடர் நடவடிக்கையின் ஒருபகுதியாகவே நேற்று முன்தினம் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சிட்னியின் தென் மேற்கு பகுதியிலுள்ள வீடொன்றை முற்றுகையிட்டு தேடுதல் நடத்திய பொலீஸார், அங்கிருந்த கூடுகளில் அடைத்துவைக்கப்பட்டிருந்த சண்டைச்சேவல்களையும், போட்டிகளின்போது அவற்றின் கால்களில் கட்டிவிட்டு, எதிரில் சண்டையிடும் சேவலுக்கு கொடூரமான காயங்களை ஏற்படுத்தக்கூடிய கூரான சிறு கத்திகள் மற்றும் வேறுபல உபகரணங்களையும் மீட்டுள்ளார்கள்.
கடந்த டிசெம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட இதுபோன்ற தேடுதல் நடவடிக்கையின்போது அகப்பட்ட (சேவல் சண்டைப்போட்டிகளுடன் தொடர்புடையவர்கள் என்று கருதப்படும்) 34 பேரை எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகும்படி உத்தரவிடப்பட்டிருந்தது.
இவர்களில் கைது செய்யப்பட்ட 56 வயது நபர் ஒருவர் விசா சிக்கல் காரணமாக உள்துறை அமைச்சினால் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
சக விலங்கினங்களுக்கு தீங்கிழைக்கும் வகையிலான எந்த நிகழ்வும் சட்டவிரோதமானது என்ற நாட்டின் ஒழுங்குமுறைகளை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்று விலங்குகள் பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
