விக்டோரிய நாடாளுமன்றத்தில் 88 ஆசனங்களைக் கொண்ட Legislative Assembly அல்லது Lower house, மற்றும் 40 அங்கத்தவர்களைக் கொண்ட Legislative Council அல்லது Upper house ஆகிய இரண்டுக்குமான அங்கத்தவர்களைத் தெரிவுசெய்வதற்கான தேர்தல் இன்று நவம்பர் 26ம் திகதி நடைபெற்றது.
இன்று காலை 8மணி முதல் 6 மணிவரை, 1,700 வாக்களிக்கும் மையங்களில், இரண்டு மில்லியன் வாக்குகள் பதிவாகியுள்ளன. மேலும் இரண்டு மில்லியன் வாக்குகள் முன்கூட்டிய வாக்களிப்பில் பதிவாகியுள்ளன.
அதாவது பதிவுசெய்யப்பட்ட 4.4 மில்லியன் விக்டோரியர்களில் ஏறக்குறைய பாதி பேர், ஏற்கனவே முன்கூட்டியே வாக்களிக்கும் மையங்களில் அல்லது தபால் மூலம் தங்கள் வாக்கை பதிவு செய்துள்ளனர்.
இதன்காரணமாக வாக்குகளை எண்ணி, தேர்தல் முடிவுகளை வெளியிடுவது தாமதமாகக்கூடும் என, மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதேநேரம் அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் ஆசனங்களுக்காக போட்டியிடுவதால், வாக்குகளை வரிசைப்படுத்தி எண்ணுவதற்கு நீண்ட நேரம் எடுக்கலாம் எனவும் குறிப்பிடப்படுகிறது.
இதேவேளை விக்டோரிய மாநில நாடாளுமன்றத்தின் 88 ஆசனங்களைக் கொண்ட Legislative Assembly அல்லது lower house-இல், 45 ஆசனங்களைப் பெறும் கட்சி ஆட்சியமைக்கும்.
கடந்த தேர்தல் முடிவின்படி, லேபர் கட்சி 55 ஆசனங்களைக் கொண்டுள்ளது. இவற்றில் 11ஐ இழந்தால் லேபர் கட்சியின் அதிகாரம் ஆட்டம் கண்டுவிடும்.
அதேபோல் தற்போது 27 இடங்களைக் கொண்டுள்ள லிபரல்-நஷனல் கூட்டணி ஆட்சியைப் பிடிப்பதற்கு மேலும் 18 இடங்களை முழுமையாக கைப்பற்ற வேண்டும்.
Melton, Werribee, Point Cook, Hawthorn, Box Hill, Northcote, Richmond மற்றும் Albert Park ஆகியவை இழக்கப்படும் அபாயத்தில் உள்ள லேபர் ஆசனங்களில் அடங்குவதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய Resolve கருத்துக்கணிப்பு, லேபர் கட்சி எட்டு முதல் 12 இடங்களை இழக்கக்கூடும் என்று சுட்டிக்காட்டியுள்ளது.
ஆனால் சுயாதீன நிறுவனமான RedBridge Group லேபர் 41 முதல் 48 இடங்களைப் பிடிக்கும் எனவும், லிபரல்-நஷனல் கூட்டணி 27 முதல் 33 இடங்கள் வரை பிடிக்கக்கூடும் என்றும் கணித்துள்ளது.
இந்தப்பின்னணியில் வலுவான, நிலையான, தனிப்பெரும்பான்மையைக் கொண்ட லேபர் அரசு மீண்டும் அமையும் என்ற நம்பிக்கை இருப்பதாக Premier Daniel Andrews கூறுகிறார்.
இந்த வார தொடக்கத்தில், தனது தொகுதியான Mulgrave-இலிருந்து, இருபது கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் Premier Daniel Andrews வாக்களித்தார்.
இது வழக்கத்திற்கு மாறானது என்றபோதிலும், தனிப்பட்ட காரணங்களுக்காக, குறிப்பாக தனது குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக வாக்களிக்க முடியும் என்பதால், முன்கூட்டியே வாக்களித்ததாக அவர் தெரிவித்தார்.
பதிலுக்கு, வாக்காளர்கள் தமது கட்சியைத் தேர்ந்தெடுத்து "புதிய தொடக்கத்தை" தெரிவுசெய்வார்கள் என்று நம்புகிறேன் என எதிர்க்கட்சித் தலைவர் Matthew Guy குறிப்பிட்டுள்ளார்.
Matthew Guy தனது மனைவி Renae மற்றும் அவர்களது மூன்று பிள்ளைகளுடன் சேர்ந்து தனது தொகுதியான Bulleen-இல் இன்று வாக்களித்தார்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது
tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
