கச்சா எண்ணெயின் விலை கடந்த திங்களன்று அமெரிக்க சந்தையில் இரண்டு சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்து ஒரு பீப்பாயின் விலை 81.50 அமெரிக்க டொலர்கள் (சுமார் 11 ஆஸ்திரேலிய டொலர்கள்) என்றானது. கடந்த ஏழு வருடங்களில் கச்சா எண்ணையின் அதி உயர்ந்த விலை இதுவாகும்.
கச்சா எண்ணை கடந்த அக்டோபர் மாதம் விற்ற விலையுடன் ஒப்பிட்டால் 120 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டிருக்கிறது.
இப்படியே விலை ஏறினால், இந்த மாத இறுதிக்குள், ஒரு பீப்பாயின் விலை 100 அமெரிக்க டொலர்கள் என உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
கடைசியாக 2014ஆம் ஆண்டில் கச்சா எண்ணையின் விலை அதிகரித்து ஒரு பீப்பாயின் விலை 80 அமெரிக்க டொலர்களைத் தாண்டியது.
இந்த விலையேற்றம் எம்மை எப்படிப் பாதிக்கும்?
நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இதன் தாக்கம் தெரியும் என்றும், குறிப்பாக சிட்னியில் இந்த விலையேற்றத்தின் தாக்கம் அதிகமாக உணரப்படும் என்றும் NRMA Peter Khoury கூறியுள்ளார்.
ஆனால் பெட்ரோலின் விலை ஏறி இறங்கிக் கொண்டிருக்கும் என்றும், அதன் விலை காலத்துக்குக் காலம் மாறிக் கொண்டிருக்கும் என்றும், ACCC (Australian Competition & Consumer Commission) என்ற நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு கூறுகிறது.

Frustrated woman pumping gas into hair Source: Getty Images
பெட்ரோல் சில்லறை விற்பனையாளர்களின் விலை நிர்ணயக் கொள்கைகளின் விளைவாக இந்த ஏற்ற இறக்கங்கள் நிகழ்கின்றன என்றும் அந்த மாற்றங்கள் மொத்த விலையில் ஏற்படும் மாற்றங்களுடன் நேரடியாகத் தொடர்புடையவை அல்ல என்றும் ACCC அறுதியிட்டுக் கூறுகிறது.
விலை ஏற்ற இறக்கம் ஒரு சுழற்சியே
சிட்னி, மெல்பன், பிரிஸ்பன் மற்றும் அடிலெய்ட் ஆகிய பெரு நகரங்களில் பெட்ரோல் விலை ஏற்ற இறக்கங்கள் எத்தனை நாள் நீடிக்கும் என்பது மாறுபடும். ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் அதில் மாற்றத்தை அவதானித்திருப்பதாக ACCC கூறுகிறது.
மேலே குறிப்பிட்ட தலைநகரங்களில், பெட்ரோலின் விலை 13 நாட்கள் குறைவாகவும், அதைத்தொடர்ந்து 38 நாட்கள் வரை அதிகரித்தும் காணப்பட்டது. இந்த சுழற்சி மாறி மாறிக் கொண்டே இருக்கும்.
மேலே உள்ள வரைபடம் சிட்னி, மெல்பன், பிரிஸ்பன் ஆகிய நகரங்களில் பிரபலமாக வாகனங்களில் பயன்படும் Unleaded Petrol விலைகள் கடந்த சில வாரங்களாக எப்படி ஏறி இறங்கியுள்ளன என்பதைக் காட்டுகிறது. கச்சா எண்ணையின் விலை உயர்ந்திருப்பது ஒரு புறம் இருக்க, சில்லறை வியாபாரிகள் விலையைக் கூட்டிக் குறைக்கும் சுழற்சியிலிருந்து மட்டுமே நாட்டில் பெட்ரோல் விலை ஏறப் போகிறது என்பதை நாம் ஊகிக்கலாம்.

Recent Fuel Prices in three major cities as reported by ACCC Source: SBS Tamil
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.