
Source: SBS Tamil
சுமார் நான்கு ஆண்டு கால தடுப்பு காவலுக்கு பிறகு நேற்று Biloela திரும்பியுள்ள பிரியா நடேஸ் குடும்பத்தினரை மகிழ்ச்சியோடு வரவேற்கும் முகமாக இன்றைய Flourish விழாவில் அவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கௌரவிக்கப்பட்டனர்.
Biloela பகுதி பூர்வீககுடி மக்களான Gangulu பழங்குடி மக்களின் புகையிட்டு வரவேற்கும் பாரம்பரிய வரவேற்பு முறையுடன் பிரியா நடேஸ் மற்றும் அவர்களின் பிள்ளைகளான கோபிகா மற்றும் தருணிக்கா ஆகியோர் வரவேற்கப்பட்டனர். பின்னர் Biloela Civic Centre விழா அரங்கிற்குள் அழைத்து செல்லப்பட்டனர் .

Kopika, Priya ,Tharnicaa and Nades Murugappan at Flourish festival on June 11, 2022 in Biloela Source: Dan Peled/Getty Images
இன்றைய Biloela Flourish திருவிழா பிரியா நடேஸ் குடும்பம் திரும்பிய கொண்டாட்ட திருவிழாவாக களைக்கட்டியது
இன்றைய விழாவில் பல்லின மக்கள் பல்கலாசார ஆடைகள் அணிந்து வந்திருப்பதை காணக்கூடியதாக இருந்தது. Flourish விழா அரங்கிற்கு வெளியே கலைக் கண்காட்சிகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
வழமையாக நடைபெறும் Flourish திருவிழா என்ற போதிலும் இன்றைய Flourish திருவிழா பிரியா நடேஸ் குடும்பம் திரும்பிய கொண்டாட்ட திருவிழாவாக களைகட்டியது.
வரவேற்புரையுடன் ஆரம்பமான இன்றைய Flourish விழாவில் நமது பாரம்பரிய இசை கருவியான வீணை இசை இசைக்கப்பட்டதுடன் கர்நாடக இசையில் பாடல்கள் பாடப்பட்டன.

Priya and Nades Nadesalingam, also known as Murugappan, and their daughters Kopika and Tharnicaa are welcomed back by supporters Source: Dan Peled/Getty Images
சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்ட பிரியா, Biloela சமூக மக்களுக்கு நன்றி கூறியதோடு தனது குடும்பம் Biloela மக்களுக்கு என்றும் நன்றியுடன் இருப்பதாக மேடையில் உரையாற்றினார். தமிழில் அவர் ஆற்றிய உரை அனைவருக்கும் புரியும் வகையில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.
பலவித கலாசார உடை அணிந்து பலர் கலந்துக்கொண்ட ஆடை அணிவகுப்பு நிகழ்வும் இன்றைய Flourish திருவிழாவில் நடைபெற்றது. அதில் நமது பாரம்பரிய உடைகளான வேட்டி மற்றும் சேலை அணிந்து நடேசலிங்கம் பிரியா தம்பதியினர் கலந்துக்கொண்டனர்.
நாளை ஞாயிற்றுக்கிழமை தருணிக்காவின் ஐந்தாவது பிறந்தநாள் விழா நடைபெற உள்ளது. தடுப்பு காவலிலிருந்து வெளியே தருணிக்கா கொண்டாடும் முதலாவது பிறந்த நாள் என்பதினால் அவரின் பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Sisters Kopika (L) and Tharnicaa, the daughters of Priya and Nades Nadesalingam, also known as Murugappan, play with balloons Source: Dan Peled/Getty Images
பிரியா, நடேசலிங்கம் மற்றும் அவர்களின் இரண்டு பிள்ளைகளான கோபிகா மற்றும் தருணிக்கா ஆகியோர் சுமார் ஒரு வருடம் பெர்த் நகரில் சமூக தடுப்பில் வாழ்ந்து வந்த நிலையில் புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள லேபர் அரசு அவர்கள் Biloela திரும்ப அனுமதி வழங்கியதை அடுத்து கடந்த புதன்கிழமை பெர்த் நகரிலிருந்து பிரிஸ்பன் வழியாக நேற்று மதியம் மத்திய குயின்ஸ்லாந்தில் உள்ள Biloela வந்தடைந்தனர்.
சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு குயின்ஸ்லாந்தின் Biloela பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டு, குடிவரவு தடுப்புமுகாமிற்கு கொண்டுசெல்லப்பட்ட பிரியா-நடேஸ் குடும்பத்தின் தொடர் போராட்டம் Biloela மக்களின் ஆதரவு மற்றும் அவர்களின் தொடர் போராட்டத்தின் விளைவாக தற்போது தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது.
இதே வேளை ஆட்கடத்தல்காரர்கள் மூலம் சட்டவிரோதமாக படகுகளில் வரும் எவரையும் தாம் நாட்டில் நுழைய அனுமதிக்க மாட்டோம் என்றும், அப்படியான படகுகள் தொடர்ந்து முன்புபோன்றே திருப்பி அனுப்பப்படும் என்றும் புதிதாக பதவியேற்ற லேபர்கட்சி அரசு கூறிவருகிறது.
SBS தமிழ்ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது