SKIP TO MAIN CONTENT

பூர்வீக குடிமக்களுக்கு அரசியலமைப்பில் அங்கீகாரம் தர கருத்து வாக்கெடுப்பு - பிரதமர் அறிவிப்பு

நாட்டின் பூர்வீக குடிமக்களுக்கு ஆஸ்திரேலிய அரசியலமைப்பில் அங்கீகாரம் தருவது தொடர்பாக அரசு கருத்து தேர்தல் (referendum) ஒன்றை முன்னெடுக்கும் என்று பிரதமர் Antony Albanese நேற்று அறிவித்தார். மக்களின் கருத்தை அறியும் வாக்கெடுப்பில் ஆஸ்திரேலிய மக்களுக்கு அரசு முன்வைக்கும் கேள்வியையும் அவர் பரிந்துரைத்தார்.

Albanese and Galarrwuy Yunupingu
Albanese and Yothu Yindi Foundation Chair Galarrwuy Yunupingu speak during the Garma Festival. Source: AAP

3 min read

Published

By Raysel


Skip to article content

"பூர்வீககுடிமக்கள்மற்றும்டோரஸ்ஸ்ட்ரெய்ட்தீவுமக்களின்குரலைநிறுவும்வகையானஅரசியலமைப்புமாற்றத்தைநீங்கள்ஆதரிக்கிறீர்களா?" என்பதே கருத்து வாக்கெடுப்பில் முன்வைக்கப்படும் கேள்வி என்று பிரதமர்  Albanese குறிப்பிட்டார்.

இந்த கேள்வி இறுதி வடிவம் அல்ல என்றும் ஆனால் இறுதி வடிவத்தை நோக்கிய ஒரு படி என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆஸ்திரேலியாவின் Northern Territory யில் உள்ள ஆர்ன்ஹெம் லேண்டில் (Arnham Land) நேற்று நடந்த கர்மா (Garma) விழாவில் பிரதமர் Antony Albanese முக்கிய உரை நிகழ்த்தினார். இந்த விழாவில் நாடு முழுவதும் உள்ள பூர்வீக குடிமக்களின் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

நான்காவது முறையாக கர்மா விழாவுக்கு வருவதில்  நான் மகிழ்ச்சியடைகிறேன் என்றும் “இதயத்திலிருந்து உலுரு அறிக்கை” என்று  பூர்வீக குடிமக்கள் முன்வைத்திருப்பதை தான் முழுமையாக செயல்படுத்துவதாக உறுதியளிக்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆஸ்திரேலியாவின் முதல் மக்களை அங்கீகரிக்க அரசியலமைப்பில் சேர்க்கக்கூடிய மூன்று வாக்கியங்களையும் அவர் பரிந்துரைத்தார்.

அபோரிஜினல் மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்களின் குரல் என்று அழைக்கப்படும் ஒரு அமைப்பை நிறுவுவது இதில் அடங்கும் என்றும், இது அவர்களின் சமூகங்கள் தொடர்பான விவகாரங்களில் நாடாளுமன்றத்திற்கும் அரசுக்கும் பூர்வீக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் செயல்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பல தசாப்தங்களாக நாம் இந்த தருணத்திற்காக காத்திருந்தோம், இது இப்போது நடக்கும் என்று பிரதமர் Antony Albanese  சூளுரைத்தார். தேசம் சீர்திருத்தத்திற்கு தயாராக உள்ளது என்று குறிப்பிட்ட அவர் பூர்வீக குடிமக்களின் நியாயம், மரியாதை, கண்ணியம் ஆகியவற்றை Voice – குரல் என்று அரசியல் சட்டத்தில் பொறிப்பது ஒரு தேசிய சாதனையாக இருக்கும் என்றும் அது அரசியலுக்கு அப்பாற்பட்டதாக இருக்கும் என்றும்  ஒருங்கிணைக்கும் ஆஸ்திரேலிய தருணம் இது என்றும் குறிப்பிட்டார்.

அரசு முன்னெடுக்கும் மாற்றத்திற்கான இந்த பணிகளை பணிவுடனும்  நம்பிக்கையுடனும் அணுகுவதாக குறிப்பிட்ட பிரதமர் Antony Albanese,  முன்னெப்போதும் இல்லாத வகையில், இந்த நாடு இந்த சீர்திருத்தத்திற்கு தயாராக உள்ளது என்று தாம் நம்புவதாகவும் இதயத்திலிருந்து வரும் அறிக்கைக்கு ஆஸ்திரேலிய இதயங்களில் இடம் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

ஆளும் கட்சியான லேபர் கட்சியைச் சார்ந்த பிரதமர் Antony Albanese யின் முன்னெடுப்பை எதிர்கட்சியான லிபரல் கட்சியின் பூர்வீக குடிமக்கள் மற்றும் சட்டம் தொடர்பான அறிவிப்பாளர் (Indigenous Affairs spokesman and Shadow Attorney General) Julian Leeser வரவேற்றார். ஆர்ன்ஹெம் லேண்டில் (Arnham Land) நடந்த கர்மா (Garma) விழாவில் பிரதமர் Albanese யுடன் கலந்துகொண்ட Julian Leeser, பிரதமரின் அறிவிப்பு ஆஸ்திரேலியாவில் அரசியலமைப்பு அங்கீகாரம் பற்றிய விவாதம் சரியான திசையில் செல்கிறது என்பதற்கான ஒரு படி என்று குறிப்பிட்டார்.

இருப்பினும், அரசாங்கத்திற்கு ஒரு எச்சரிக்கை மற்றும் சில ஆலோசனைகளையும் Julian Leeser முன்வைத்தார்.

நாம் அரசியலமைப்பு அங்கீகாரம் பற்றி பேசுகிறோம் என்றும், ஆனால் பூர்வீக மக்களின்  குரல் எனும் அமைப்பு குறித்து பொதுமக்களுக்கு எழுகின்ற நியாயமான கேள்விகளுக்கு அரசு பதிலளிப்பது முக்கியம் என்றும் அவர் கூறினார். இந்த குரல் அமைப்பில் யார் பணியாற்றுவார்கள்? அவர்கள் எப்படி தேர்வு செய்யப்படுவார்கள்? அது என்ன செய்யும்? அது பூர்வீக குடிமக்களின் பிரச்சனைகளை எப்படி தீர்க்கும்? என்று பல கேள்விகள் எழுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், இந்த கேள்விகளுக்கு இதுவரை விடை இல்லை என்றும் ஆனால் பூர்வீக குடிமக்களின்  குரல் அமைப்பு என்ன செய்யும் என்ற மக்களின் நியாயமான கேள்விகளுக்கு அரசு பதில் தரவேண்டும் என்றும் லிபரல் கட்சியின் பூர்வீக குடிமக்கள் மற்றும் சட்டம் தொடர்பான அறிவிப்பாளர் Julian Leeser கூறினார்.

நாட்டின் பூர்வீக குடிமக்களுக்கு ஆஸ்திரேலிய அரசியலமைப்பில்  அங்கீகாரம் தருவது தொடர்பாக அரசு கருத்து தேர்தல் (referendum) ஒன்றை முன்னெடுக்கும் என்று பிரதமர் Antony Albanese அறிவித்தது உணர்ச்சிகரமான தருணம் என்று நீண்ட காலம் பணியாற்றிவரும் பூர்வீக குடிமக்கள் பின்னணி கொண்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய பூர்வீக குடிமக்கள் துறை தொடர்பான அமைச்சருமான லிண்டா பர்னி கூறினார்.

பிரதமரின் இந்த அறிவிப்பைக் கேட்டும் தான் அழ ஆரம்பித்தேன் என்றும்  வெளிப்படையாக, பிரதமர் என்ன அறிவிக்கப் போகிறார் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம் என்றாலும் உண்மையில் இந்த நாட்டில் பூர்வீக குடிமக்களின் குரல் எனும் அமைப்பு குறித்த வாக்கெடுப்பு பற்றிய விவாதத்தை அரசு முன்னெடுத்துள்ளது மிகவும் மகிழ்ச்சியான தருணம் என்றும் இந்த விவாதத்தில் அனைவரும் கலந்து கொள்ளவேண்டும் என்றும் அவர் கூறினார்.

அரசியல் சட்டத்தில் மாற்றம் கொண்டுவருவது தொடர்பாக பொது வாக்கெடுப்பு அல்லது கருத்துத் தேர்தல் நடத்தப்பட்டால் அது கடந்த இருபது ஆண்டுகளுக்குபின்னர் நடத்தப்படும் முதல் கருத்து வாக்கெடுப்பு தேர்தலாக அமையும்.

1901 முதல் 44 ஆஸ்திரேலிய கருத்து தேர்தல் - வாக்கெடுப்புகளில் எட்டு வாக்கெடுப்புகள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now