ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிஸன் மற்றும் உள்துறை அமைச்சர் பீற்றர் டட்டன் ஆகியோரின் உருவ பொம்மைகளை கூண்டில் அடைத்துவைத்து அகதிகளுக்கு ஆதரவாக மெல்பேர்னில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மருத்துவ காரணங்களுக்காக மனுஸ் மற்றும் நவுறு தீவுகளிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு கொண்டுவரப்பட்டு விடுதலை செய்யப்படாமல், ஹோட்டல்களில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அகதிகளுக்கு ஆதரவாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆஸ்திரேலியாவுக்கு கொண்டுவரப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருக்கும் இடங்களில் ஒன்றான மெல்பேர்ன் - Carlton, Park ஹோட்டலுக்கு முன்பாக இந்த உருவ பதாகையை முன்நிறுத்திய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஹோட்டலில் சுமார் அறுபது அகதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவானவர்களில் ஒருவர் கருத்து தெரிவிக்கும்போது - எமது நாட்டின் அரசியல்வாதிகள்தான் சர்வதேச சட்டத்தை மதிக்காமல் அதனை மீறும்வகையில், அகதிகளை அடைத்துவைத்திருக்கிறார்கள். ஆகவே, அவர்களைத்தான் இவ்வாறு கூண்டில் அடைக்கவேண்டுமே தவிர, அப்பாவி அகதிகளை அல்ல என்றார்.
