ஆஸ்திரேலியாவிற்குள் தபால்கள் மற்றும் இணையவழி முகவரிகளை எழுதும்போது குறிப்பிட்ட இடத்துக்கான பூர்வீக பெயரையும் இணைத்துக்கொள்ளும்படி ஆஸ்திரேலிய பூர்வீககுடிப் பெண்ணொருவர் மேற்கொண்ட வேண்டுகோளுக்கு ஆஸ்திரேலிய தபால் சேவையான Australia Post ஆதரவு தெரிவித்துள்ளது.
விக்டோரிய - நியூ சவுத் வேல்ஸ் எல்லை நகரமான Wagga Wagga-விற்கு அருகில் வாழும் Rachael McPhail என்ற Gomeroi பெண்மணி இந்த கோரிக்கையை Australia Post நிறுவனத்திடம் முன்வைத்து பேச்சு நடத்திவருகிறார்.
இதனையடுத்து Australia Post மூலம் தபால்கள் மற்றும் பொருட்களை அனுப்பும்போது குறிப்பிட்ட முகவரியுடன் அந்த இடத்துக்கான பூர்வீக பெயரையும் எழுத விரும்புபவர்கள் அதனைச் சேர்த்துக்கொள்ள முடியும் எனவும், பெறுநரின் பெயருக்கு கீழே ஆனால் street address-க்கு மேலே அதனைக் குறிப்பிடும்படியும் Australia Post தெரிவித்துள்ளது.
இந்தமுறையைப் பின்பற்றி தனக்கான கடிதங்களையும் பொதிகளையும் பல நாட்களாக பெற்றுவருவதாகவும், கடிதங்கள் தொலைந்துபோகும் என்று யாரும் அஞ்சத்தேவையில்லை எனவும் Rachael McPhail தெரிவித்துள்ளார்.
அதேவேளை Rachael McPhail-இன் இந்த முன்னெடுப்புக்கு சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதுடன், பலர் தமது முகவரிகளுடன் அந்த இடத்தின் பூர்வீக பெயரையும் சேர்க்க ஆரம்பித்துள்ளதாக கூறியுள்ளனர்.
தபால்களில் மாத்திரமல்லாது, பல்கலைக்கழகங்கள், வங்கிகள், வியாபார நிறுவனங்கள், MyGov, PayPal, Star Track, Uber ஆகியவையும் தங்களது அன்றாட தபால் மற்றும் இணைய பரிவர்த்தனைகளில் முகவரிகளை எழுதும்போது, அந்த இடத்துக்கான பூர்வீக பெயரை எழுதுவது, இந்த நாட்டின் பூர்வீகம் தொடர்பான சிறுதகவலை எடுத்துச்செல்வதற்கு உதவி செய்வது மாத்திரமல்லாமல், இந்த நாட்டுக்கு மதிப்பளிக்கும் சிறுபணியாக அமையும் என்று Rachael McPhail கூறியுள்ளார்.
