‘கோமகனின் காதல்’ என்ற வரலாற்றுத்தொடர் ஒன்றைப் பலவருடங்களுக்கு முன்னர் விகடனில் எழுதினார், மறைந்த எழுத்தாளர் சாவி அவர்கள்.
காதலிக்காக முடிதுறந்த பிரிட்டிஷ் மன்னர் எட்டாம் எட்வர்ட் பற்றிய கதைதான் அது. அந்த எட்டாம் எட்வர்ட் வேறுயாருமல்ல; சுமார் 70 ஆண்டுகால நிறைவான ஆட்சியின் பின் கடந்த எட்டாம் தேதி காலமான இரண்டாவது எலிஸபெத் மகாராணியின் பெரிய தந்தையார்தான் எட்டாம் எட்வர்ட் மன்னர். அப்போது மன்னராக இருந்த மன்னர் ஐந்தாம் ஜோர்ஜ் காலமானதால் அவரது மூத்தமகன் எட்வர்ட், எட்டாம் எட்வர்ட் என்ற பெயரில் மன்னரானார்.

எட்டாம் எட்வர்ட் மன்னர், அமெரிக்கப் பெண்மணியும் விவாகரத்துப் பெற்றவருமான தனது காதலி Wallis Simpson ஐ மணமுடித்து பட்டத்து அரசியாக தனது பக்கத்தில் அமர்த்திக்கொள்ள விரும்பினார். ஆனால் அது ஒரு constitutional crisis ஆக, அரசியல்சாசனச் சிக்கலாக மாறியது.
சிக்கல் என்னவென்றால் Church of England என்ற திருச்சபையின் தலைவரும் மன்னரேயாவார். அப்போது Church of England திருச்சபை, விவாகரத்து பெற்ற பெண்ணோ அல்லது ஆணோ மறுமணம் செய்வதை அனுமதிக்கவில்லை. ஆகவே மன்னர் ஒரு விவாகரத்து பெற்ற பெண்ணை மணம் செய்வது ஒரு constitutional crisis அரசியல் சாசனத்திற்கு முரணானதாகப் பார்க்கப்பட்டது. மன்னர் தலைவராக இருக்கும் Church of England திருச்சபையின் வரையறைகளை மன்னரே மீறுவதாகவும் பார்க்கப்பட்டது.
ஆனால் தனது காதலியை மணமுடிப்பதில் உறுதியாகவிருந்த மன்னர் எட்டாம் எட்வர்ட் தனது பதவியைத் துறந்தார்; தனது காதலி Wallis Simpson ஐ மணந்தார்.

இப்படி மன்னர் எட்டாம் எட்வர்ட் பதவி விலகியதன் காரணமாக மன்னர் எட்டாம் எட்வர்டின் தம்பியான இளவரசர் Albert பதவியேற்கவேண்டிய சூழ்நிலை உருவானது.
மன்னராகப் பதவியேற்பதிலோ அரசியலிலோ பெரிய ஆர்வமில்லாதவரும் எட்வர்ட் மன்னரின் தம்பியும் எலிஸபெத்தின் தந்தையுமான இளவரசர் Albert, ஆறாவது ஜோர்ஜ் மன்னர் என்ற பெயரில் பொறுப்பேற்றார். அவரது துணைவியார் பெயரும் எலிஸபெத் என்ற வகையில் அவர் ராணி எலிஸபெத் என்று அழைக்கப்பட்டார். தற்போது மறைந்த இரண்டாம் எலிசபெத்தின் தாய் ராணி எலிஸபெத் சூடியிருந்த பிளட்டினத்தால் செய்யப்பட்ட கிரீடத்தில்தான், இப்போது பரவலாக ‘இந்தியாவிலிருந்து கடத்திவரப்பட்டது, இந்தியாவுக்குச்சொந்தமானது’ என்று சொல்லப்படும் Kohinoor வைரம் பதிக்கப்பட்டிருந்தது.

இப்படி 60 ஆண்டுகளுக்கு முன் எழுத்தாளர் சாவி அவர்கள் எழுதிய எட்டாம் எட்வர்ட் மன்னரின் அந்த காவியக் காதல் கதை விவரிக்கும் சூழ்நிலைகள் காரணமாக முடி சூடும் அடுத்த வாரிசாக வந்தவர்தான் ஆறாவது ஜோர்ஜ் மன்னரின் மூத்த மகளான இளவரசி எலிஸபெத். இளவரசியின் 26 ஆவது வயதில் அவரது தந்தை ஆறாம் ஜோர்ஐ் சுகவீனம் காரணமாகக் காலமானதால் இரண்டாம் எலிஸபெத் மகாராணி -Queen Elizabeth II என்ற பெயரில் மகாராணியாக பதவியேற்றார் .
இரண்டாம் எலிஸபெத் மகாராணி 96 வயதுவரை வாழ்ந்து அதில் பெரும் பகுதியை- 70 ஆண்டுகள் பொதுவாழ்வில் மகாரணியாக க் கழித்த அவரது பதவிக்காலத்தில் அவரது முதலாவது பிரதமரான Winston Churchill உட்பட 14 பிரதமர்கள் பிரிட்டனில் பிரதமராக ப் பதவி வகித்திருக்கிறார்கள். பிரிட்டிஷ் மகாராணியின் பதவி ஒரு ceremonial role நிறைவேற்று அதிகாரமில்லாத அலங்காரப் பதவி என்றவகையிலும் நாட்டின் அரசியல், பொருளாதார, சமூக மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் தொடர்பான தீர்மானங்களில் அவர் நேரடியாக தலையிடுவதில்லை என்ற வகையிலும் அரசின் கொள்கை தொடர்பான பொதுமக்களின் மற்றும் ஊடகங்களின் விமரிசனங்களுக்கு அவர் ஆளாவதில்லை. பதவியிலிருக்கும் பிரதமரின் மற்றும் மந்திரிசபையின் ஆலோசனையின் படியே அவர் செயலாற்றுவார். ‘Political impartiality and non-intervention’ என்ற அரசியற் கட்சி பேதமின்றியும் பதவியிலிருக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளில் தலையிடாமலும் இருந்ததன் காரணமாகவே தொடர்ந்தும் நாட்டு மக்களின் அபிமானத்திற்கும் அன்பிற்கும் பாத்திரமானவராக அவரால் இருக்கமுடிந்தது.

பொதுவாழ்வைப் பொறுத்தமட்டில் அவரது பதவிக்காலம் கறைபடியாத பதவிக்காலமாகவே பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் காமன்வெல்த் நாடுகளின் தலைவி என்ற வகையிலும் ஆஸ்திரேலியா உட்பட் பதினைந்து நாடுகளின் பரிபாலனத்திற்குப் பொறுப்பான மகாராணி என்ற வகையிலும் அவர் தமது கடமைகளை அர்ப்பணிப்புடனும் விசுவாசத்துடனும் ஆற்றியிருக்கிறார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இந்தப்பின்னணியில் பொது வாழ்வில் அவர் சந்தித்திருக்கக் கூடிய சவால்கள் அல்லது பிரச்சனைகள் குறித்த பதிவுகள் அல்லதுவிமரிசனங்கள் வெகுவாக இல்லை.
பிரிட்டனில் 1963 இல் பதவிலிருந்து விலகிய பிரதமர் Macmillan இன் சிபாரிசின்படி Lord Homeஐப் பிரதமாக நியமித்தது; 1975 இல் ஆஸ்திரேலியாவில் Whitlam அரசை டிஸ்மிஸ் செய்தது; 2019 இல் பிரிட்டனில் சிறுபான்மை Conservative கட்சி சந்தித்த Brexit விவாதத்தின்போது பாரளுமன்ற விவாதம் நடக்கவிடாமல் பாராளுமன்ற கூட்டுத்தொடரை prorogue என்ற முறையில் ஒத்திவைத்தது; காஷ்மீர் பிரச்சனையச் சுமுகமாகத் தீர்க்க் கூடிய சந்தர்ப்பம் அமைந்தபோதும் அதைப் பயன்படுத்தாமல் விட்டது என்ற சில விமர்சனங்கள் அவர் மீது உள்ளன. ஆனாலும் நாட்டின் பிரதமரே பொறுப்பானவர் என்றும் மகாராணி அரசியல் விடயங்களில் தலையிடுவதில்லை என்ற பாரம்பரியம் காரணமாக இவற்றுக்குப் பதில்சொல்லவேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்படவில்லை என்றும் கூறி அவரால் தப்பித்துக்கொள்ளமுடிகிறது.
அரசியல் சவால்கள் இல்லை என்றாலும் அவர் தனது ஆட்சிக்காலத்தில் சந்தித்த சவால்களுக்கும் பிரச்சனைகளுக்கும் அவரது அரச குடும்ப அங்கத்தவர்களே காரணமானார்கள்.

முழு உலகமும் வியக்கும் வண்ணமாக நடைபெற்ற சார்ல்ஸ் டயானா திருமணம் 1981 இல் நடந்தது. திருமணம் நடந்து 11 ஆண்டுகளில்,1992 இல், இருவரும் திருமணத்திற்கு வெளியில் உறவுகளை வைத்திருந்தார்கள் என்பதன் அடிப்படையில் இடம்பெற்ற விவாகரத்து, பக்கிங்ஹாம் மாளிகையை உலுக்கியது மட்டுமல்ல மகாராணிக்கும் அது பெரும் சவாலாக அமைந்தது. அதைத்தொடர்ந்து 1995ஆம் ஆண்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான டயானாவின் நேர்முகம் Royal Family என்ற அரச குடும்பத்திற்குள் புதைந்து கிடக்கும் அந்தரங்கங்களையும் கணவன் மனவி இருவருக்கிடையே ஏற்பட்டிருந்த விரிசல்களையும் உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது.
இளவரசி டயானா 1997 இல் பிரான்ஸில் கார் விபத்து ஒன்றில் இறந்தபின்பு பங்கிங்காம் அரண்மணை 5 நாட்களுக்கு மேல் மௌனம் காத்தது. ராணி எலிஸபெத் Balmoral மாளிகையிலேயே தங்கியிருந்ததும், தேசிய கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விட அனுமதிக்காததும் மக்கள் மத்தியில் உணர்வலைகளைத் தோற்றுவித்தன.

டயானாவின் மரணம் காரணமாக எழுந்த அனுதாப அலையின் அழுத்தம் காரணமாக மகாராணி இரங்கலுரையாற்ற பின்னர் முன்வந்ததால் பல விமர்சனங்கள் எழுந்தன.
Captain Mark Phillips உடன் 20 வருடங்களுக்கு மேல் மணவாழ்க்கையில் ஈடுபட்டிருந்த இளவரசி Anne, மகாராணி எலிஸபெத்தின் ஒரே மகள், பிரிட்டிஷ் கடற்படைத்தளபதி Timothy Laurence உடன் வைத்திருந்த ரகசிய உறவு தொடர்பாக 1989 இல் பகிரங்கப்படுத்தப்பட்ட மிக மிக அந்தரங்கமான காதல் கடிதங்கள் காரணமாக Royal family என்ற அரச குடும்பத்தின் மீது மக்களுக்கிருந்த மதிப்புக்கும் மரியாதைக்கும் பங்கம் ஏற்பட்டது.
இளவரசர் Harry, அமெரிக்கரும், நடிகையும் கலப்பு இனத்தவருமான Megan Markle உடன் நிச்சயதார்த்தம் (engagement) செய்த செய்தி வெளிவந்ததும் ‘பிரிட்டிஷ் அரசகுடும்பம் நவீன காலத்திற்கு அமைவாக மாற்றமடைந்து வருகிறது’ என்று வரவேற்றவர்கள் 2020 இல் இருவரும் அரச அலுவல்களில் இருந்து விலகுவதாக க் கூறி கலிபோர்னியாவுக்கு புலம் பெயர்ந்த போது அதிர்ச்சியடைந்தார்கள்.

அவர்கள் இருவரும் Oprah Winfreyக்கு 2021 இல் அளித்த தொலைக்காட்சிப் பேட்டியில் அரசகுடும்பத்தில் சில அங்கத்தவர்கள் இனத்துவேஷம் கொண்டவர்களாக இருப்பதை பகிரங்கப்படுத்தியோடு Megan Markle தற்கொலை செய்துகொள்ளும் சிந்தனைக்கு ஆட்படும் அளவுக்கு நெருக்கடிகள் இருந்ததாக வெளிப்படுத்தியதன்காரணமாக அரசகுடும்பத்தின் மீதான மதிப்பு மேலும் பாதிப்படைந்தது.
Jeffrey Epstein உடன் இணைந்து தன்னைப் பாலியல் அடிமையாக பயன்படுத்தியதோடு எலிஸபெத் மகாராணியின் புதல்வர் இளவரசர் Andrew தன்மீது பாலியல் தாக்குதல் நடத்தினார் என்று இளம் பெண் Virginia Guiffre முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் காரணமாக இளவரசர் Andrewவின் கௌரவ இராணுவ அங்கீகாரங்கள் களையப்பட்டன. His Royal Highness என்ற கௌரவமும் பறிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர் சம்பவம் நடந்தபோது 18 வயதுக்கும் குறைவானவர் என்பதால் இந்த பாலியல் குற்றச்சாட்டு child sex offence என்றவகையில் பார்க்கப்பட்டது. நீதிமன்றத்திற்கு வெளியே செய்து கொள்ளப்பட்ட சமரசத்தில் வழக்கைத்தாக்கல் செய்த Virginia Guiffre இற்கு பெருந்தொகைப் பணம் வழங்கப்பட்டதால் வழக்கு கைவிடப்பட்டது.
தனிப்பட்ட வகையில் பார்க்கும் போது 2021 ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி மகாராணியின் கணவர் Duke of Edinburgh காலமானது மகாராணியின் வாழ்க்கையில் ஏற்பட்ட பேரிழப்பாகும்.

அரசகுடும்பத்திற்குள் சில சிக்கல்கள் ஏற்பட்டபோதும், மகாராணி எலிஸபெத் மீது பிரித்தானிய மக்கள் வைத்திருந்த பேரபிமானமும் பேரன்பும் மாறவில்லை. தங்கள் வாழ்நாளில் தங்களுக்குத் தெரிந்த ஒரே ராணி, மகாராணி எலிஸபெத் என்பதாலும் அவரது மலர்ந்த முகம், கனிவான பார்வை, வாஞ்சையான உரையாடல், தனித்து அடையாளப்படுத்தும் அவரது ஆடைத்தெரிவு என்பன காரணமாகவும் அவர் நாட்டு மக்களை வெகுவாக வசீகரித்திருந்தார்.
மகாராணியாக உயரத்தில் இருந்தாலும் சாதாரண மக்களுடன் அவர் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளத் தயங்கவில்லை. சாதாரணமக்களின் அசாதாரணச் செயல்கள் மூலமாகவே தான் ஊக்கம் பெறுவதாக அவர் தெரிவித்தார். மக்கள் எலிஸபெத் மகாராணியை ஒரு தேவதையைப் போலப் பாரத்தார்கள். மகாராணியின் மரணம் அவர்கள் வாழ்க்கையில் சொல்லொணாத் துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பேரிழப்பாகப் பார்க்கப்படுகிறது.
——————————————————————————————
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in
பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
