குயின்ஸ்லாந்து மாநிலத்தில் சமூகப் பரவல் ஊடாக மற்றுமொருவருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மாநில Premier Annastacia Palaszczuk அறிவித்துள்ளார்.
இதையடுத்து அங்கு சமூகப் பரவல் ஊடாக தொற்றுக் கண்டோர் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.
இவருக்கு நேற்றையதினம் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாகவும் இந்நபர் ஏற்கனவே தொற்றுக்கண்ட பிரிஸ்பனின் Stafford பகுதியைச் சேர்ந்தவரின் சகோதரர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நபருக்கு தற்போது நோய் அறிகுறிகள் எதுவும் இல்லையெனவும் ஆனால் சமீபத்தில் இவருக்கு தொற்று கண்டிருப்பதாகவும் சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து குறித்த நபர்தான் தற்போது ஏற்பட்டுள்ள பரவலின் மூலகாரணமாக இருக்கக்கூடும் எனவும் அண்மையில் குயின்ஸ்லாந்து Princess Alexandra மருத்துவமனையுடன் தொடர்புடையதாக ஏற்பட்ட பரவல் மூலம் இவருக்கு தொற்று ஏற்பட்டிருக்கக்கூடும் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
இதுஒருபுறமிருக்க தொற்று உறுதிப்படுத்தப்பட்ட இரண்டாவது நபர், கோவிட் சோதனை முடிவுக்காக காத்திருந்த காலப்பகுதியில் தனது வீட்டில் 25 பேருடன் ஒன்றுகூடலை நடத்தியிருந்தார் என வெளியான செய்தியில் உண்மையில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவரது வீட்டில் 5 பேர் இருந்ததாகவும் அவர்களில் பெரும்பாலானோர் அங்கு வசிப்பவர்கள் எனவும் இதுதொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெறுவதாகவும் குயின்ஸ்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை நிலைமையை விரைவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்பதால் பரந்தளவிலான முடக்கநிலையை நடைமுறைப்படுத்தும் எண்ணம் தற்போதைக்கு கிடையாது என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
