இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் ஊடாக குயின்ஸ்லாந்து வந்த மூதாட்டியொருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது இரண்டு மாதங்களின் பின்னர் உறுதிசெய்யப்பட்டிருக்கின்றநிலையில் இது குறித்து மருத்துவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
பிரிஸ்பன் வடபகுதியை சேர்ந்த 70 வயது மூதாட்டியொருவருக்கே இந்த தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட பெண்ணுக்கு அநேகமாக இந்தியாவிலேயே நோய்த்தொற்று ஏற்பட்டு படிப்படியாக அது வளர்ச்சியடைந்திருக்கவேண்டும் என்று குயின்ஸ்லாந்து சுகாதாரத்துறையினர் கருதுகின்றனர்.
இவருக்கு ஏற்பட்டுள்ள தொற்று குறித்தும் அவரது ஏனைய மருத்துவ பின்னணிகள் குறித்தும் தற்போது விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
குயின்ஸ்லாந்தில் இதுவரை சுமார் ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேரிடம் கொரோனா வைரஸ் தொற்றுக்கான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் தொடர்ந்தும் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன என்றும் மாநிலத்தின் சுகாதார திணைக்களம் கூறியுள்ளது.
உங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தால் உங்களது மருத்துவரையோ அல்லது 1800 020 080 என்ற இலக்கத்தையோ அழையுங்கள்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
