ஒவ்வொரு சந்ததியின் வாழ் நாளும் அதிகரிக்கிறது எமது கண்கூடே தெரிகிறது. ஆனாலும் வயதானவர்களுக்கு ஞாபக மறதியும் அதிகரித்துக் கொண்டே போகிறது. எனது பெற்றோர் இன்னமும் பல காலம் உயிரோடு இருப்பார்கள் தானே என்ற நினைப்பில் பல கேள்விகளை நாம் கேட்காமல் பிற் போட்டு வருவதாகவும், உயிரோடு இருக்கும் பெற்றோருக்கு ஞாபக மறதி அதிகரித்து வருவதாலும் பலர் அறிய நினைக்கின்ற பல விடயங்கள் அறியாமலே போய் விடுகின்றன என்று Clare Ansberry என்பவர் "Wall Street Journal" பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்ட சில கேள்விகளை உங்களுக்காகத் தமிழில் தருகிறோம். இந்தக் கேள்விகளுக்கான விடைகளை உங்கள் பெற்றோரிடமிருந்தோ குடும்பத்தில் நெருக்கமாகப் பழகியவரிடமிருந்தோ நீங்கள் கேட்டறிய அவை உதவும் என்று நம்புகிறோம்.
- என்னை முதன் முதலாய்ப் பார்த்த போது உங்கள் மனதில் பட்டது என்னவெல்லாம் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா?
- எனது பெயரை எவ்வாறு தேர்ந்தெடுத்தீர்கள்?
- ஒரு குழந்தையாக இருந்த போது எவற்றையெல்லாம் விரும்பினேன்? சற்று வளர்ந்த பின்னர் எவற்றை விரும்பினேன்?
- எனக்காக நீங்கள் பாடிய பாடல்கள் ஏதேனும் நினைவில் இருக்கிறதா? இப்போது அவற்றைப் பாட முடியுமா?
- என் உடன்பிறப்புகள் சிறு வயதில் எப்படி இருந்தார்கள்?
- நான் வளர்ந்து வரும் போது உங்களுக்கு ஏற்பட்ட கடினமான தருணங்கள் எவை? அதில் நான் தோற்றுவித்தவை எவை?
- மீண்டும் முதலில் இருந்தே ஆரம்பிக்க முடியும் என்றால், நீங்கள் என்னை வித்தியாசமாக வளர்ப்பீர்களா?
- எனது சொந்த குழந்தைகளை வளர்ப்பது குறித்து நீங்கள் என்ன அறிவுரை கூறுவீர்கள்?
- வளர்ந்த பின்னர் நான் என்னவாக வர வேண்டும், எப்படி இருக்க வேண்டும் என்ற உங்கள் கனவுகள் என்ன?
- எனது அம்மாவை / அப்பாவை எப்படி சந்தித்தீர்கள்?
- நீங்கள் என்னைப் பற்றிப் பெருமைப்படுகிறீர்களா?
- உங்கள் பெற்றோர் எப்படிப்பட்டவர்கள்?
- உங்கள் பெற்றோருடன் உங்களது உறவு எப்படி இருந்தது?
- ஒரு குழந்தையாக உங்களை எப்படி விவரிப்பீர்கள்? நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தீர்களா?
- உங்கள் குழந்தைப் பருவத்தில் நடந்தவற்றில் உங்களுக்கு மிகவும் பிடித்த நினைவு என்ன? மிகவும் மோசமானது என்ன?
