SKIP TO MAIN CONTENT

ரியோ ஒலிம்பிக் 2016: சில தகவல்கள்!

AAP
Source: AAP

3 min read

Published

Updated

Presented by Renuka.T


Skip to article content

உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான 31ஆவது ஒலிம்பிக் போட்டி, சிட்னி நேரப்படி, இன்று , சனிக்கிழமை காலை 9 மணிக்கு ஆரம்பமாகிறது.

பிரேசிலின் Rio de Janeiro (ரியோ டி ஜெனீரோ)வில் நடைபெறுவதால் இந்தப் போட்டி ரியோ ஒலிம்பிக் என அழைக்கப்படுகிறது.  இன்று ஆரம்பமாகும் இந்தப் போட்டிகள் 21ஆம் தேதி நிறைவடைகின்றன. 206 நாடுகளைச் சேர்ந்த 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இதில் பங்கேற்கவுள்ளனர்.  அதில் புதிதாக ஒரு அணி.  அகதிகள் மட்டும் அடங்கிய அணியாக ஒரு அணி போட்டியிடகிறது.  28 விளையாட்டுகளில் 306 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்தப் போட்டிகள் 34 மைதானங்களில் நடத்தப்படுகின்றன.  இந்த ஒலிம்பிக் போட்டியை சுமார் 8 பில்லியன் டொலர் செலவில் பிரேசில் நடத்துகிறது.

ரியோ டி ஜெனீரோவில் உள்ள புகழ்பெற்ற கால்பந்து மைதானமான மரக்காணா மைதானத்தில் தொடக்க விழா நடைபெறுகிறது.  இங்கு 75 ஆயிரம் பேர் அமர்ந்து நிகழ்ச்சியை ரசிக்கலாம். 3 மணி நேரத்துக்கு மேலாக நடைபெறவுள்ள தொடக்க விழாவில் முதல் நிகழ்ச்சியாக ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுகிறது. அதைத் தொடர்ந்து ஒலிம்பிக் கொடி ஏற்றப்படும்.

அதன்பிறகு ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள நாடுகளின் கொடி அணிவகுப்பு நடைபெறும். ஒலிம்பிக்கின் பிறப்பிடம் கிரேக்கம் என்பதால் அந்நாட்டினர் முதல்வரிசையில் கொடியேந்திச் செல்வார்கள். அதைத் தொடர்ந்து மற்ற நாட்டினர் அணிவகுக்க, கடைசியாக போட்டியை நடத்தும் பிரேசில் வீரர், வீராங்கனைகள் அணிவகுத்துச் செல்வார்கள்.

பிரேசிலின் பிரபல பாப் பாடகர்களின் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளன. இதேபோல் பிரேசிலின் கலாசாரத்தைப் பறைசாற்றும் வகையிலான கலைநிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன. தொடக்க விழாவில் 4,800 கலைஞர்கள் பங்கேற்கிறார்கள். தொடக்க விழாவின் இறுதியாக இரவைப் பகலாக்கும் வாணவேடிக்கைகள் ரியோ டி ஜெனீரோவை அதிர வைக்கவுள்ளது.

பிரேசிலில் மலிந்து கிடக்கும் ஊழல், கடுமையான பொருளாதார நெருக்கடி, பெரும் போராட்டங்கள், ஸிகா வைரஸ் அச்சுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு தடைகளை தாண்டி இந்த ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. ஸிகா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஏராளமான வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக்கிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக் போட்டிக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்கிறது. இதுதவிர ரியோ டி ஜெனீரோ, அதிக அளவில் குற்றங்கள் நடக்கக்கூடிய ஒரு நகரமாகும். அங்குள்ள ஒலிம்பிக் போட்டியாளர்கள் தங்கும் இடங்களில், ஆஸ்திரேலியா, டென்மார்க், சீன அணிகளின் உடைமைகள் ஏற்கெனவே திருடு போயுள்ளன என்பதால், போட்டியின்போது அசம்பாவிதம் நடைபெறாமல் இருப்பதற்காக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 85 ஆயிரம் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பதக்கப் பட்டியலில் முதலிடத்தைப் பிடிப்பதற்கு வழக்கம்போல் இந்த முறையும் அமெரிக்கா, சீனா இடையேதான் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊக்கமருந்து விவகாரத்தில் சிக்கிய ரஷிய தடகள வீரர்கள் ஒட்டுமொத்தமாக தடை செய்யப்பட்டுள்ளதோடு, அந்நாட்டைச் சேர்ந்த மேலும் சில விளையாட்டு வீரர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பிரிட்டன் பெரிய சவாலின்றி 3ஆவது இடத்தைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா 554 பேரை களமிறக்கியுள்ளது. இதில் 292 பேர் வீராங்கனைகள். இதன்மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் அதிக வீராங்கனைகளை களமிறக்கிய அணி என்ற பெருமை அமெரிக்காவுக்கு கிடைத்துள்ளது. சீனா 413 பேரையும், பிரிட்டன் 366 பேரையும், போட்டியை நடத்தும் பிரேசில் 465 பேரையும் களமிறக்கியுள்ளன.  ஆஸ்திரேலியாவிலிருந்து 421 போட்டியாளர்கள் களமிறங்கவுள்ளார்கள்.

தொடக்க விழாவில் பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே, ஒலிம்பிக் சுடரை ஏற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒலிம்பிக்கில் எப்போதுமே சுடரை ஏற்றுபவர் யார் என்பது ரகசியமாகவே வைக்கப்படும். ஆனால் இந்த முறை பீலேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது வெளியே கசிந்தது.

தனது பெயரைப் பயன்படுத்துவதற்கான உரிமம் அமெரிக்க நிறுவனம் ஒன்றிடம் இருப்பதால் அந்த நிறுவனத்தின் அனுமதி கிடைத்தால் மட்டுமே என்னால் சுடரை ஏற்ற முடியும் என பீலே தெரிவித்திருந்தார். எனினும் அந்த நிறுவனத்திடம் அனுமதி பெறுவதில் எந்த சிக்கலும் இருக்காது என தெரிகிறது. இதனால் பீலே நிச்சயம் ஒலிம்பிக் சுடரை ஏற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now