ஆஸ்திரேலியாவின் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை வரலாறு காணாத அளவில் குறைத்துள்ளது. இதன் பின்னணி என்ன?
கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக நடந்துவரும் covid நோய் பரவலினால் உலகம் முழுவதும் பெரும் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் பல வியாபார நிறுவனங்கள் மூடப்பட்டன. பலபேர் வேலை இழந்துள்ளார்கள். தற்பொழுது இந்த நாட்டில் வேலை இல்லாதவர்கள் கிட்டத்தட்ட 7% சதவீதம்வரை கூடி விட்டது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி மிகவும் குறைந்து விட்டது.
பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தவும், வேலை இல்லாமையை போக்கவும் அரசாங்கம் பல திட்டங்களை ஏற்கனவே நடைமுறைப்படுத்தி வருகிறது. ஆஸ்திரேலியாவின் ரிசர்வ் வங்கியும் ஏற்கனவே இரண்டு முறை வட்டி விகிதத்தை குறைத்து இருந்தது. இருந்தாலும் பொருளாதார வளர்ச்சி இன்னும் மந்தமாகவே உள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேம்படவேண்டும் என்றால், மக்களின் பண புழக்கங்கள் அதிகரிக்க வேண்டும். அதாவது மக்களிடம் செலவு செய்ய பணம் இருக்க வேண்டும். அந்த நோக்கத்தில் ரிசர்வ் வங்கி பணத்தை வாரி வீசுவது போல், சில திட்டங்களை அறிவித்துள்ளது.
- அடுத்த 6 மாதங்களில் ரிசர்வ் வாங்கி 100 பில்லியன் டாலர்களுக்கு அரசாங்க பத்திரங்களை வாங்கி அந்த பணத்தை பொருளாதார புழக்கத்தில் விட உள்ளது.
- கடன் வாங்குவதற்கான வட்டி விகிதத்தை 0.25% லிருந்து 0.1% ஆக குறைத்துள்ளது
- அரசாங்க பத்திரங்களுக்கு கொடுக்கும் வட்டி விகிதத்தை 0.25% லிருந்து 0.1% மாக குறைத்துள்ளது
- வணிக வங்கிகளுக்கு-commercial banks கொடுக்கும் வட்டியையும் 0.25% லிருந்து 0.1% ஆக குறைத்துள்ளது
- இந்த மாதிரியான குறைக்கப்பட்ட வட்டிகள் மிக குறுகிய எதிர்காலத்துக்குள் அதிகரிப்பட வாய்ப்பில்லை என்றும் ரிசர்வ் வாங்கி கணித்துள்ளது.
வட்டி விகித குறைப்பு வீட்டு விலையில் எப்படி தாக்கம் செலுத்தப்போகிறது?
வங்கிகள் கடன் வாங்குவதற்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வாங்கி 0.25% லிருந்து 0.1% என குறைத்துள்ளதனால், மக்கள் வீடு வாங்குவதற்கோ, வேறு செலவுகளுக்கோ அதிகப்படியாக கடன் வாங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், வீடுகளின் விலை அதிகமாகலாம். அப்படி ஆகும் போது, ஒருவர் தன் வீட்டின் விலை அதிகமான மதிப்பில் இருக்கிறது என்ற மன நிலையில், அவர் அதிகமாக செலவழிக்கக்கூடும், அதனால் பொருளாதாரம் வளரும் என்றும் எதிர்பார்க்கலாம்.
கடந்த மார்ச் மாதத்தில் இருந்து வணிக வங்கிகளுக்கு ரிசர்வ் வாங்கி 0.25% வட்டியில் கடன் கொடுத்து வருகிறது. அந்த வட்டியும் 0.1% ஆக குறைக்கப்படுகிறது. இதனால் அதிக வியாபார நிறுவனங்கள் வங்கிகளிடம் கடன் வாங்கும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.
வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதால் வங்கிகள் அதிக கடன் தரக்கூடுமா?
இதுநாள் வரை வட்டி விகிதம் மிகக்குறைவாக இருந்தாலும், மக்களுக்கு கடன் கொடுப்பதில் வங்கிகள் கொஞ்சம் கவனமாகவே இருக்கின்றன. இதற்கு ஒரு முக்கிய காரணம் ஒரு குறுகிய எதிர்காலத்தில் திடீர் என்று ரிசர்வ் வங்கி வட்டியை அதிகரித்து விட்டால் என்ன ஆகும் என்பதினால் தான்.
ஆனால், நேற்றைய தினம் ரிசர்வ் வங்கி கொடுத்துள்ள அறிக்கையில் தற்போதுள்ள மிகக்குறைவான வட்டி விகிதம், சமீப காலத்தில் அதிகரிக்க வாய்ப்பில்லை என்று கணித்துள்ளது.
நாட்டின் பணவீக்கம் தற்போது 2%க்கும் குறைவாக உள்ளது. அது 2, 3% வரை அதிகரிக்க வேண்டும், அதற்கு மக்களின் வேலை-ஊதியங்கள் அதிகரிக்க வேண்டும், வேலை இல்லாமை குறையவேண்டும். அந்த நிலைமை வரும் வரை, வட்டி விகிதம் அதிகரிக்கப்போவதில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இதற்கு பல வருடங்கள் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மக்கள் தைரியமாக கடன் வாங்க விரும்புவார்கள், வங்கிகளும் கடன் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பொருளாதார வளர்ச்சி அடுத்த சில வருடங்களில் வேகமாக ஏற்படக்கூடும்.
