அகதிகளுக்கு ஆதரவாக பிரிஸ்பனில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பிரதமர் ஸ்கொட் மொறிஸனின் வாகனத்தின் மீது சாயம்(paint) வீசியமை, குழப்பம் விளைவித்தமை ஆகிய சம்பவங்களுடன் தொடர்புடையவர்களில் ஒருவர் என்று கருதப்படும் மாணவி ஒருவர், பிரதமர் கலந்துகொள்ளும் எந்த நிகழ்விலும் அவருக்கு 250 மீற்றர் அண்மையாகப் போகக்கூடாது என்று நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளார்.
மனுஸ் - நவுறு தீவுகளிலிருந்து மருத்துவ காரணங்களுக்காக அழைத்துவரப்பட்டு ஆஸ்திரேலியாவில் நீண்ட காலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள அகதிகளை விடுவிக்கும்படி கடந்த ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி, பிறிஸ்பனில் பிரதமர் கலந்துகொண்ட நிகழ்வொன்றில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சுமார் ஐம்பது பேர் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் பிரதமரின் உத்தியோப்பூர்வ வாகனத்தின் மீது சாயம் வீசப்பட்டதுடன், நிகழ்விலிருந்து அவர் பின்வழியாக அழைத்துச்செல்லப்பட்ட வாகனத்தினை கலைத்துச்சென்று கோஷம் எழுப்பப்பட்டது.
இவ்வாறு பொது இடத்தின் அமைதிக்கு ஊறு விளைவித்தார்கள் என்று பொலீஸார் தாக்கல் செய்த குற்றச்சாட்டின் பேரில், பிரிஸ்பன் மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட விசாரணையில், குற்றஞ்சாட்டப்பட்ட 19 வயது மாணவி ஒருவர் முன்னிலையாகியிருந்தார்.
அவரை பிரதமர் கலந்துகொள்ளும் எந்த நிகழ்வுக்கும் அவருக்கு அருகாமையில் 250 மீற்றருக்குள் போகக்கூடாது என்பதை பிணை நிபந்தனைகளில் ஒன்றாக அறிவித்த நீதிமன்றம், வழக்கினை எதிர்வரும் பெப்ரவரி மாதம் இரண்டாம் திகதிக்கு ஒத்திவைத்தது.
