SKIP TO MAIN CONTENT

தடுப்புமுகாம்களில் கைத்தொலைபேசி பாவனையை தடைசெய்யக்கூடாது- அகதிகள் செயற்பாட்டாளர்கள்

Brisbane asylum seekers protest against detention of refugees during the COVID-19 crisis.
Brisbane asylum seekers protest against detention of refugees during the COVID-19 crisis. Source: LightRocket

2 min read

Published


Skip to article content

ஆஸ்திரேலிய குடிவரவு தடுப்புமுகாம்களில் கைத்தொலைபேசிகள், இணையத்தொடர்புடைய கருவிகள் உட்பட வேறு பலபொருட்களையும் தடைசெய்வது மற்றும் அவற்றை தேடுதல் நடத்தி சுவீகரிப்பது என்பவை தொடர்பில் Australian Border Force-அமைப்பிற்கு கூடுதல் அதிகாரங்களை கொடுக்கும் விசேட சட்டத்திருத்தமொன்றை அரசு முன்மொழிந்துள்ளமை நாமறிந்த செய்தி.

ஆனால் இத்தகைய செயற்பாடு தடுப்புமுகாம்களிலுள்ள அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களை கடுமையாக பாதிக்கும் என அகதிகள் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தடுப்புமுகாமிலிருந்த பிரியா-நடேஸ் குடும்பம்பத்திடம் கைத்தொலைபேசி இருந்திருக்காவிட்டால் அவர்கள் இப்போது நாடுகடத்தப்பட்டு இலங்கைக்கு அனுப்பப்பட்டிருப்பார்கள் என அகதிகள் செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதேபோன்று குர்திஷ் பின்னணி கொண்ட அகதியான Behrouz Boochani-ஆல் விருதுவென்ற நூலை எழுதியிருக்க முடியாது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

தடுப்புமுகாமிலுள்ள அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களிடம் கைத்தொலைபேசிகள் இல்லாதுபோனால் முகாம்களுக்குள் நடைபெறும் வன்முறைகள், அத்துமீறல்கள் போன்றவை வெளியேவராது போய்விடும் என்பதுடன் மரணங்கள்கூட சம்பவிக்கலாம் என்பதால் அங்குள்ளவர்கள் தொடர்ந்தும் கைத்தொலைபேசிகளை பயன்படுத்துவது அவசியமாவதாக அகதிகள் செயற்பாட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

எனினும் தடுப்புமுகாம்களிலுள்ள அனைவரது கைத்தொலைபேசிகளும் கைப்பற்றப்படாது எனத் தெரிவித்துள்ள பதில் குடிவரவு அமைச்சர்  Alan Tudge கைத்தொலைபேசிகளை தவறாகப் பயன்படுத்துபவர்களிடமிருந்து அவற்றைப் பறிமுதல் செய்யும்வகையிலேயே புதிய சட்டம் அமையும் எனக் குறிப்பிட்டார்.

குடிவரவு தடுப்புமுகாம்களில் அகதிகள் மாத்திரமன்றி, பாலியல் வல்லுறவு - போதைப்பொருள் பாவனை - சிறுவர் பாலியல் துன்புறுத்தல் என பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் பலர் விசா ரத்துச்செய்யப்பட்டு, நாட்டைவிட்டு வெளியேற்றப்படும்வரையில் மேற்படி தடுப்புமுகாம்களில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

குறித்த நபர்கள் தடுப்புமுகாம்களுக்குள் தங்களது நடவடிக்கைகளை தொடர்வதை தடுக்கும் முகமாக இந்தப்புதிய சட்டத்திருத்தம் கொண்டுவரப்படவுள்ளதாக பதில் குடிவரவு அமைச்சர்  Alan Tudge தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள சட்டங்களின்படி,  தடுப்புமுகாம்களில் தேடுதல் நடத்தவும் தடைசெய்யப்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அவற்றை சுவீகரிப்பதற்கும் பொலீஸாருக்கு மாத்திரமே அதிகாரமுள்ளது.

ஆஸ்திரேலியா முழுவதுமுள்ள 10 குடிவரவு தடுப்புமுகாம்களில் ஆகக்குறைந்தது 1370 பேர் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now