பங்களாதேஷிலிருந்து புறப்பட்டு கடந்த நான்கு மாதங்களாக நூறுபேருடன் நடுக்கடலில் அலைந்துகொண்டிருந்த அகதிகள் படகொன்றை கடந்த புதன்கிழமை இந்தோனேஷிய மீனவர்கள் மீட்டு கரைக்குக்கொண்டு சென்றுள்ளார்கள்.
ஆட்கடத்தல்காரர்களினால் கைவிடப்பட்ட நிலையில் - குடிப்பதற்கு தண்ணீர்கூட இல்லாத நிலையில் - தங்கள் சிறுநீரை தாங்களே அருந்திக்கொண்டிருந்த இந்த அகதிகள் மிகக்கடுமையாக பாதிகப்பட்டநிலையில் மீட்கப்பட்டுள்ளனர் என்று இந்தோனேஷிய மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
வடக்கு Aceh கடற்பகுதியில் வைத்து மீட்கப்பட்ட சுமார் நூறு அகதிகளும் ரோஹிங்கர்கள் என்றும் சுமார் 48 ஆண்களும் 35 பெண்களும் அடங்கிய இந்த அகதிகளில் குழந்தைகள் மற்றும் சிறுவர்களும் அடங்குவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷின் Balukhali முகாமிலிருந்து நான்கு மாதங்களுக்கு முன்னர் புறப்பட்ட இந்த அகதிகளின் படகில் இருந்த உணவுப்பொருட்கள் அனைத்தும் தீர்ந்த நிலையில், நடுக்கடலில்வைத்து ஆட்கடத்தல்காரர்களினால் இன்னொரு படகுக்கு மாற்றப்பட்டார்கள் என்றும் பின்னர் எந்த உதவியுமின்றி அநாதரவாக கைவிடப்பட்டார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தக்கொடிய கடற்பயணத்தின்போது படகில் வந்துகொண்டிருந்த பெண்ணொருவர் உட்பட இருவர் இறந்துபோயுள்ளனர். இறந்த பெண்ணின் இரண்டு குழந்தைகளும் படகிலுள்ளவர்களினால் கொண்டுவரப்பட்டு தற்போது இந்தோனேஷியர்களினால் காப்பாற்றப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த படகில் வந்தவர்கள் தாம் ஆட்கடத்தல்காரர்களால் மிகமோசமான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்தப்படகில் வந்தவர்கள் அனைவரும் ஆளுக்கு 3350 டொலர்கள் வீதம் இந்தப்பயணத்துக்காக ஆட்கடத்தல்காரர்களுக்கு வழங்கியிருப்பதாக தெரியவந்துள்ளது.
