மெல்பேர்னில் இடம்பெற்ற வாகன விபத்தில் கொலைக்குற்றம் பதிவுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த இந்திய மாணவர் ஒருவர், சொந்த நாட்டுக்கு தப்பியோடியிருந்தநிலையில் அவர் தற்போது காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்திய மாணவரான Puneet என்பவர் கடந்த 2008 ஆம் ஆண்டு, மதுபோதையில் வாகனத்தை ஓட்டிச்சென்று விபத்துக்கு உள்ளாக்கி Dean Hofstee என்ற மாணவரின் மரணத்துக்கு காரணமானவர் என்று பொலீஸாரால் கைதுசெய்யப்பட்டு பின்னர் நீதிமன்றால் பிணையில் விடுதலை செய்ப்பட்டிருந்தார்.
அதன்பின்னர், போலி கடவுச்சீட்டில் இந்தியாவுக்கு தப்பிச்சென்ற குறிப்பிட்ட நபர் அங்கு தலைமறைவாகியிருந்தார்.
ஆனால் குறித்த நபர் கடந்த 2013ம் ஆண்டு திருமணம் செய்துகொள்ள முயன்றபோது, திருமண வீட்டில்வைத்து டில்லி பொலீஸாரால் கைதுசெய்யப்பட்டார்.
இவரை மெல்பேர்னுக்கு கொண்டுவந்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு விக்டோரிய சட்டத்தரப்புக்கள் இந்திய அரசோடு இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்தன.
ஆனால், மிகுந்த மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட நபரை நாடு கடத்தமுடியாது என்று டில்லி நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் நாடு கடத்தப்படும் விவகாரம் இழுபறிப்பட்டுவந்தது.
இந்த வருட ஆரம்பத்தில் குறிப்பிட்ட நபரது உடல் - மனநிலை அவரை மெல்பேர்னுக்கு அழைத்துவருவதற்கு ஏற்றதாக மருத்துவர்கள் உறுதிசெய்ததையடுத்து டில்லி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவர் தற்போது காணாமல்போயுள்ளதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரைத் தேடிக்கண்டுபிடிக்கும் பணியில் பொலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
