இலங்கையின் புகழ் பெற்ற பொப்பிசைப் பாடகர் எஸ்.இராமச்சந்திரன் நேற்று (16-02-2020) காலமானார்.
யாழ்ப்பாணம், அரியாலையில் பிறந்த ராமச்சந்திரன் அவர்கள் இளவயதிலிருந்தே கண்ணன் இசைக்குழுவினருடன் இணைந்து திருவிழாக்கள் மற்றும் திருமண இல்லங்களில் பாடி இசைத்திறனை வெளிப்படுத்தியவர்.
பின்னர் 1970-களில் இலங்கை வானொலியில் நிகழ்ச்சித் தயாரிப்பு உதவியாளராக இணைந்து கொண்ட இவர் அங்கு பல்வேறு பொறுப்புகள் வகித்து ஓய்வு பெற்ற பின்பும் ஒலிபரப்பாளர்களைப் பயிற்றுவிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
1970களில் இலங்கை வானொலி ஊடாக மெல்லிசையும் , பொப்பிசையும் வளர்ச்சி கண்ட காலகட்டத்தில் இவர் டேவிட் ராஜேந்திரன் அவர்களுடன் இணைந்து பாடிய "வானவில்லின் வர்ண ஜாலமே" என்ற பாடல் ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றது.
இது தவிர “ஆடாதே ஆடாதே சூதாட்டம் ஆடாதே”, “நத்தை என ஊர்ந்து நடக்கின்றார்”, “வான நிலவில் அவளைக் கண்டேன்” போன்றவையும் இவரது பிரபல பாடல்களில் சிலவாகும்.
மிக அமைதியான சுபாவம், அதிர்ந்து பேசாத நற்பண்பு கொண்டவர் ராமச்சந்திரன் என அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த ராமச்சந்திரன் அவர்கள் தனது 71வது வயதில் நேற்று காலமானார்.