ஸ்ரோபெர்ரி பழங்களுக்குள் தையல் ஊசி கண்டுபிடிக்கப்பட்ட பின்னணியில் ஸ்ரோபெர்ரி பழங்களை கடைகளில் வாங்கி சாப்பிடுபவர்கள் அவற்றை சிறிய துண்டுகளாக வெட்டியபின் உண்ணுமாறு குயின்ஸ்லாந்து சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
இவ்வார ஆரம்பம் முதல் குயின்ஸ்லாந்து மற்றும் விக்டோரியாவில் விற்பனை செய்யப்பட்ட Berry Obsession மற்றும் Berry Licious ஸ்ரோபெர்ரி பழங்களுக்குள் தையல் ஊசிகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்த நிலையில், பிறிதொரு சம்பவமாக குயின்ஸ்லாந்தின் Gatton பகுதியிலுள்ள Coles-இல் நேற்று ஸ்ரோபெர்ரி பழப்பெட்டிக்கு மேல் சிறிய கூரிய பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவரும் அதேநேரம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஸ்ரோபெர்ரி பழங்களை சிறிய துண்டுகளாக நறுக்கிவிட்டு உண்ணுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை Berry Obsession மற்றும் Berry Licious ஸ்ரோபெர்ரி பழங்களை வாங்கியவர்கள் அவற்றை குப்பையில் எறிந்துவிடுமாறு மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ள அதேநேரம் இவை விற்பனையிலிருந்தும் அகற்றப்பட்டுள்ளன.
Sunshine Coast-ஐச் சேர்ந்த ஸ்ரோபெர்ரி விற்பனையாளரிடமிருந்து பெறப்பட்ட பழங்களில் தையல் ஊசி காணப்பட்டதாக இதுவரை 4 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த ஸ்ரோபெர்ரி பண்ணையின் முன்னாள் பணியாளர் ஒருவர் பழிவாங்கும் நோக்கில் பழங்களுக்குள் ஊசியை செலுத்தியிருக்கக்கூடும் என நம்பப்படுகிறது.
