SKIP TO MAIN CONTENT

ஸ்ரோபெர்ரி, வாழைப்பழம், ஆப்பிள் வரிசையில் மாம்பழத்திற்குள்ளும் ஊசி?

pixabay
Source: Pixabay

1 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

ஆஸ்திரேலியாவில் பழங்களுக்குள் ஊசிகள் கண்டுபிடிக்கப்பட்டுவரும் தொடர்ச்சியான சம்பவங்களின் புதிய செய்தியாக தற்போது மாம்பழத்தினுள் ஊசி காணப்பட்டதாக  பெண் ஒருவர் முறையிட்டுள்ளார்.

ஏற்கனவே ஆஸ்திரேலியா முழுவதும் ஸ்ரோபெர்ரியில் தையல் ஊசி கண்டுபிடிக்கப்பட்டதைத்தொடர்ந்து பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிசெய்துகொள்ளும் வகையில் தீவிர விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டிருக்கின்றன.

ஸ்ரோபெர்ரி பழங்கள் தொடர்பான விசாரணைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது குயின்ஸ்லாந்தில் வாழைப்பழத்திற்குள் தகடொன்று கண்டுபிடிக்கப்பட்டதாக முறையிடப்பட்டதைத் தொடர்ந்து, பழங்கள் தொடர்பான பரபரப்பு இன்னொரு பரிணாமத்தை எட்டியது.

இதையடுத்து ஆப்பிள் பழங்களில் ஊசி கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அடுத்த செய்தி வெளியானது.

இந்தப்பின்னணியில் தற்போது மாம்பழத்திற்குள் ஊசி காணப்பட்டதாக நியூ சவுத் வேல்ஸ் மாநில பெண் ஒருவர் முறையிட்டுள்ளார்.

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்திலுள்ள Coles West Gosford பல்பொருள் அங்காடியில் இம்மாம்பழங்கள் கொள்வனவு செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பிலும் காவல்துறையினர் ஆராய்ந்துவருகின்றனர்.

இதேவேளை ஆஸ்திரேலிய பழச்சந்தையையும் விவசாயிகளையும் நலிவடையச் செய்யும் விஷமிகளின் செயல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், அனைவரும் பழங்களை தொடர்ந்தும் கொள்வனவு செய்து அவதானமாக உண்ண வேண்டும் எனவும், இதன்மூலம் விவசாயிகளுக்கான ஆதரவை அவர்கள் வெளிப்படுத்த முடியுமெனவும் பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உணவுப்பொருட்களுக்கு சேதம் விளைவிக்கும்  விஷமிகளுக்கான தண்டனை 15 ஆண்டுகளாக அதிகரிக்கப்படுவதாக பிரதமர் Scott Morrison அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now