SKIP TO MAIN CONTENT

சாம்சங் ராஜ்ஜியத்தின் தந்தை மறைந்தார்!

Samsung chairman Lee Kun-hee has died at 78.
Samsung chairman Lee Kun-hee is recovering in a Seoul hospital after suffering a heart attack. (AAP) Source: AAP

3 min read

Published

Updated

By R.Sathiyanathan


Skip to article content

1970/80களில் ஜப்பானின் Sony யும் Toshiba வும் Hitachi யும் JVC யும் Panasonic உம், consumer electronic பொருட்களான TV, cassette recorder, sound systems, stereo, Walkman போன்றவற்றால் சந்தைகளை நிரப்பிக்கொண்டிருந்த வேளையில், Samsung இன் சிறிய 14 அங்குல தொலைக்காட்சிப் பெட்டிகளைக் கண்டுகொள்வார் யாருமில்லை.

அப்போது, ஜப்பானிய தொழில்நுட்பத்தையும் ஜப்பானிய உதிரிப்பாகங்களையும் பயன்படுத்தி சிறிய தொலைக்காட்சிப் பெட்டிகளைத் தயாரித்த மிகச்சிறிய நிறுவனம் தென் கொரியாவின் Samsung. இப்போது அதன் சொத்து மதிப்பு பல கோடி அமெரிக்க டாலர்கள் என்பதுமட்டுமல்ல, Samsung இன் தொலைக்காட்சித் திரைகளைத்தான் Sony இப்போது பயன்படுத்துகிறது.பிரபலமான Apple இன் iphone, Google இன் pixel என்பவற்றிற்கான chips களை உற்பத்தி செய்வதுகூட Samsung தான்.

Samsung இன்றைய தேதியில் உலகில் மிகப் பெரிய, இராட்சத consumer electronic தயாரிப்பு நிறுவனம் மட்டுமல்ல அது இன்று ஒரு global brand. உலகில் மிகப்பெரிய மொபைல் போன் தயாரிப்புநிறுவனம் மட்டுமல்ல மொபைல் போன், TV என்பவற்றுக்கான screen -திரைகளை உற்பத்தி செய்வதிலும் நம்பர் 1நிறுவனமாக திகழ்கிறது.

tv
Source: samsung

Computers, Microwave, washing machine, fridge, vacuum cleaner என்று Samsung brand இல்லாத வீடுகளே இப்போது இல்லை. Shipbuilding-கப்பல்கட்டுதல், insurance-காப்பீடு, construction-கட்டுமானம், hotels, amusement park என்று இன்னோரன்ன வர்த்தக நடவடிக்கைகளில் கொடிகட்டிப்பறக்கும் நிறுவனம் Samsung.

கடந்த 30 ஆண்டுகளில் இந்த சாதனையை நிகழ்த்திக்காட்டிய Samsung இன் chairman, Lee Kun Hee தனது 78 வயதில் நேற்றுமுன்தினம் காலமானார். கடந்த சில வருடங்களாக நோய்வாப்பட்டிருந்த அவர் இறக்கும்போது அவரது குடும்பத்தினர் அருகே இருந்தார்கள்.

Getty Images
Source: Getty Images

தென்கொரிய அதிபரின் இரங்கல் செய்தியை சிரேஷ்ட அதிகாரிகள் எடுத்துச்சென்று குடும்பத்தினரிடம் கையளித்தார்கள். ‘ தென்கொரிய வர்த்தக உலகின் சின்னமான அவரது தலைமைப்பண்பு இந்த நெருக்கடியான காலகட்டத்தில் எமது வர்த்தக நிறுவனங்களுக்கு துணிச்சலையும் தெம்பையும் தரும்’ என்று அதிபர் Moon Jae தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.

அப்போது ஜப்பானின் கட்டுப்பாட்டில் இருந்த கொரியாவில் Daegu என்ற இடத்தில் 1942 ஆம் ஆண்டு பிறந்த Lee டோக்கியோ Waseda பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்துறையில் பட்டம் பெற்றார். பின்பு வாஷிங்டனில் ஜோர்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் masters in business administration படித்தார். ஆனால் பூர்த்திசெய்யவில்லை.

1987இல் தனது தந்தையாரின் நிறுவனத்தைப் பொறுப்பேற்ற Lee 1993 இல் இரண்டு மாத வெளிநாட்டு பயணம் ஒன்றை மேற்கொண்டபின் நாடு திரும்பினார். தனது நிறுவனம் தயாரிக்கும் பொருட்களின் தரம் உயர்த்தப்படவேண்டும் என்ற தீர்மானத்தோடு திரும்பிய அவர் தனது நிறுவன அதிகாரிகளிடம் இப்படிச்சொன்னார். “மாற்றுவோம் எல்லாவற்றையும் மாற்றுவோம்; எங்கள் மனைவிகளையும் பிள்ளைகளையும் தவிர எல்லாவற்றையும் மாற்றுவோம்’ இது இப்போதும் நினைவு கூரப்படுகிறது.

இந்த மாற்றத்தின் பிரதிபலனாகத்தான் இப்போது Samsung இன் வருடாந்த sales விற்பனை- வருமானம் 225 பில்லியன் அமெரிக்க டாலராக அசுர வளர்ச்சி கண்டிருக்கிறது.

1950-1953 காலப்பகுதியில் இடம்பெற்ற Korean War- கொரிய யுத்தத்தால் நிலைகுலைந்து போன தென்கொரிய பொருளாதாரத்தை சர்வதேச வளரச்சியடைந்த நாடுகளின் பொருளாதர நிலைக்கு சமமாக உயர்த்தியதில் Samsung போன்ற நிறுவனங்கள் ஆற்றிய பணி மகத்தானதாகும்.

ஆனால், இதுபோன்ற நிறவனங்களின் வெளிப்படையற்ற தன்மை, அரச அதிகாரிகளை விலைக்கு வாங்கி அவர்களைப் பயன்படுத்திக்கொள்ளுதல், வரி ஏய்ப்பு, பங்குச்சந்தை ஊழல், லஞ்ச லாவண்யங்கள் என்பவை காரணமாக ஊழல் மலிந்த நிறுவனங்களாகவே இவை பார்க்கப்பட்டன. Samsung உம் இதற்கு விதிவிலக்கல்ல.

Samsung
Source: AP Photo/Lee Jin-man

1996 இல் கொரிய அதிபருக்கு லஞ்சம் கொடுத்தது தொடர்பாக Lee ஐக்குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்பளித்தது. 2008 இலும் வரி ஏய்ப்பு, லஞ்சம் மற்றும் சட்டவிரோத பங்குசந்தை நடவடிக்கைகள் காரணமாக நீதிமன்றம் குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. இரண்டு சந்தர்ப்பங்களிலும் அவர் தண்டனையிலிருந்து தப்பினார். அரசின் தலையீடு காரணமாக தண்டனைகள் suspended sentence ஆக மாற்றப்பட்டன.

2014 இல் Lee நோய்வாய்ப்பட்டதால், அவரது மகன் Lee Jae Yong நிர்வாக அலுவல்களைக் கையேற்றார். அவர் 2017 இல் தென்கொரிய அதிபர் Park Geun-hye க்கு பத்து மில்லியன் டாலர் லஞ்சம் கொடுத்தது தொடர்பாக நிரூபிக்கப்பட்டதில் அதிபர் பதவியிழந்ததோடு சிறை செல்லவும் நேர்ந்தது. Lee Jae Yong இற்கு 5 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டாலும் அவர் suspended sentence என்ற வகையில் சில மாதங்களில் வெளியே வந்தார். அவர்மீது மேலும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

Lee Jae-yong, vice chairman of Samsung Electronics Co., arrives for his trial.
Source: AAP

Samsung சாம்ராஜ்யத்தைக்கட்டி எழுப்பிய Lee Kun Hee உறுதியும் நிதானமும் மிக்க ஒரு தலைவர். நிறுவனத்தின் அபிவிருத்தியில் தொலைநோக்கு பார்வை கொண்டிருந்த அவர் நாளாந்த நிர்வாகத்தில் தலையிடுவதில்லை. சர்வாதிகாரியாக செயல்பட்ட அவர் அதிரடியான முடிவுகளை எடுத்தார். 2008 இல் financial crisis என்ற சர்வதேச நிதி நெருக்கடி ஏற்பட்டபோதும் அந்தச்சந்தர்ப்பத்தில் பல பில்லியன் டாலர்களை பிஸினஸில் முடக்கியது பின்னர் பெரும் பலனைத்தந்தது.

நிறுவன ஊழியர்களின் தொழிற்சங்க உரிமைகளை வழங்குவதில் அவர் சிரத்தை எடுக்கவில்லை என்பது Lee குடும்பத்தினருக்கு எதிராக வைக்கப்படும் மற்றொரு முறைப்பாடு.

Samsung நடந்துவந்த பாதை அப்பழுக்கற்ற கறையில்லாப் பாதையல்ல என்றபோதும் இவ்வாறான நிறுவனங்களின் வளர்ச்சியிலேயே நாட்டின் பொருளாதார வளர்ச்சி தங்கியிருக்கிறது என்பதால், அரச நிறுவனங்கள் குற்றங்களைக் கண்டும் காணாத வகையில் செயல்படுவது இந்த நிறுவனங்களுக்கு சாதகமான சூழலையே ஏற்படுத்தியது.

People walk past a Samsung store in Shanghai, China.
Source: EPA

இவையெல்லாவற்றையும் கடந்து Samsung இன் இன்றைய வளர்ச்சியைப் பார்க்கும் போது, மறைந்த Lee இன் தீர்க்க தரிசனத்தின் பெறுபேறாகவே இந்த வளர்ச்சியைப் பார்க்க முடியும்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now