கால்பந்து விவரணையாளார், ஒலிபரப்பாளார், லெஸ் மர்ரே (Les Murray) தனது 71வது வயதில் காலமானார்.
பல தசாப்தங்களாக, Les Murray ஆஸ்திரேலிய கால்பந்தின் அடையாளமாக, அதன் குரலாக இருந்தவர். Mr Football - 'மிஸ்டர் கால்பந்து' என அறியப்பட்ட அவர், ஆஸ்திரேலிய கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக கால்பந்து விளையாட்டை வளரவைத்த பெருமைக்குரியவர்.
11 வயதாக இருந்த போது, அவரது குடும்பத்துடன் கம்யூனிஸ்ட் ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்குள்ளான ஹங்கேரி நாட்டிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு குடியேறினார் லெஸ் மர்ரே. 1956ம் ஆண்டிலிருந்து ஆஸ்திரேலியாவில் வாழும் இவர், ஆட்கடத்தல்காரர் புகலிடக்கோரிக்கையாளருக்கு உதவுவதற்கு எதிராக அரசு பிரச்சாரம் செய்ய ஆரம்பித்த காலப்பகுதியில், தானும் ஆட்கடத்தல்காரரின் உதவியுடன் தான் தப்பி வந்தார் என்பதை வெளிப்படையாகக் கூறி, 2015 ஆம் ஆண்டு SBS தொலைக்காட்சிக்காக அதனை ஆவணப்படுத்தவும் செய்தார்.
இவரது குடும்பம் ஆஸ்திரேலியாவிற்கு வந்த போது, முதன்முதலில், டார்வினில் தரையிறங்கினார்கள். பின்னர், நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் வொகா வொகா பகுதியில் குடியேற்ற தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டனர்.
ஒரு SBS கால்பந்து வர்ணனையாளர் மற்றும் தொகுப்பாளர் என்ற வகையில், அவர் எட்டு உலகக் கோப்பைகளை மக்களிடம் எடுத்து வந்துள்ளார். 2014ம் ஆண்டில் ஓய்வு பெற்ற அவரை ஆஸ்திரேலிய கால்பந்து அமைப்பு (FFA), கால்பந்துக்குப் பிரபலமான முக்கியமானவர்கள் பட்டியலில் (hall of fame) சேர்த்துக் கொண்டது.
SBS விடுத்துள்ள அறிக்கை
நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த லெஸ் மர்ரே காலமானார் என்ற செய்தி எமக்கு வருத்தத்தைத் தருகிறது.
ஆஸ்திரேலிய கால்பந்துக்கு 35 ஆண்டு கால பங்களிப்பு செய்தது மட்டுமல்ல, ஒரு தனித்துவமான மரபை விட்டுச்செல்லும் மிகுந்த அன்புக்குரிய சக பணியாளராகவும், வழிகாட்டியாகவும், நண்பராகவும் லெஸ் மர்ரே திகழ்ந்தார். அவரது இழப்பை, வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
மிஸ்டர் கால்பந்து என்று பெயர்வாங்கியுள்ள லெஸ் மர்ரே அவர்களை SBS தொலைக்காட்சி ஒளிபரப்பாளர் என 1980ல் அவர் பணிபுரிய ஆரம்பித்த பின்னரே அறிய ஆரம்பித்தார்கள். ஆனால் அவர் ஒரு கால்பந்து வர்ணனையாளராக மட்டும் இருந்ததில்லை. ஆஸ்திரேலியாவில் கால்பந்து என்ற விளையாட்டின் வளர்ச்சி, புகழ் மற்றும் கால்பந்தின் வெற்றி அனைத்தும் அந்த விளையாட்டின் மேல் அவர் கொண்டுள்ள பற்று மற்றும் அவரது நேசிப்பின் பிரதிபலிப்பே ஆகும்.
.