கிறிஸ்மஸ் நெருங்கிக்கொண்டிருக்கும் காலப்பகுதியில் இணையவழியிலான போலி விளம்பரங்களின் மூலம் பணத்தை சுருட்டிக்கொள்ளும் நூதனத்திருடர்கள் அதிகரித்திருப்பதால் பொதுமக்கள் பண்டிகைக்கால பரிசுப்பொருட்கள் கொள்முதல்செய்யும்போது எச்சரிக்கையுடன் செயற்படுமாறு பொலீஸார் பகிரங்க அறிவிப்பு விடுத்துள்ளனர்.
இணையத்தில் பணம் செலுத்தி பொருட்களை வாங்கும்போது, இணையத்தளங்கள் குறித்து கவனம் செலுத்துமாறும் நம்பகமான பொருட்களுக்கும் போலிப்பொருட்களுக்கும் இடைலான வித்தியாசங்கள் குறித்து கவனத்தை கடைப்பிடிக்கும்படியும் பொலீஸார் அறிவித்துள்ளனர்.
கிறிஸ்மஸ் - புதுவருட பண்டிகைக்காலத்தினை முன்னிட்டு எண்ணுக்கணக்கற்ற போலி இணையத்தளங்கள் புதிது புதிதாக முளைத்துள்ளன என்றும் அவற்றில் இலவச வாழ்த்து அட்டைகள், இலவச சுற்றுலா கூப்பன்கள், இலவச விடுமுறை வாய்ப்புக்கள் என்று பல்வேறு கவர்ச்சிகரமான போலி விளம்பரங்கள் வாடிக்கையாளர்களை ஏமாற்றும்வகையில் தயாரிக்கப்பட்டிருக்கின்றன என்றும் பொலீஸார் எச்சரித்துள்ளனர்.
இந்த இணையத்திருடர்களின் வலையில் விழுபவர்கள் பணத்தை மாத்திரமன்றி தங்களது தனிப்பட்ட விவரங்களையும் பறிகொடுத்துவிடுகின்றனர் என்றும் இதுதொடர்பில் விழிப்புடன் செயற்படுமாறும் பொலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
