பிரிட்டனில் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் ஆஸ்திரேலியாவில் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் இதன் ஒரு கட்டமாக வெளிநாடுகளிலிருந்து ஆஸ்திரேலியா திரும்ப அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைக்கப்படுவதாகவும் பிரதமர் ஸ்கொட் மொறிசன் அறிவித்துள்ளார்.
தேசிய அமைச்சரவையில் நடத்தப்பட்ட கலந்துரையாடல்களின் அடிப்படையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பிரிஸ்பேர்ன் பெருநகரில் நடைமுறைப்படுத்தப்பட்ட 3 நாட்கள் முடக்கநிலை நேற்று பிற்பகல் 6 மணியுடன் முடிவுக்கு வந்துள்ளது.
தனிமைப்படுத்தல் மையமொன்றின் துப்பரவுப் பணியாளருக்கு பிரிட்டனில் பரவியுள்ள புதியவகை கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது இனங்காணப்பட்டதையடுத்து பிரிஸ்பேர்ன் மாநகர் 3 நாட்களுக்கு முடக்கப்பட்ட நிலையில் தற்போது இக்கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது.
சர்வதேச பயணிகள்
ஆஸ்திரேலிய குடியுரிமை மற்றும் நிரந்தர வதிவிட உரிமை உள்ளவர்களும் அவர்களுடைய நெருங்கிய குடும்ப உறுப்பினர்களும் மாத்திரமே ஆஸ்திரேலியாவுக்குள் வரமுடியும்.
சர்வதேச விமானப்பயணத்திற்கான தற்காலிக நடவடிக்கைகள் அரசாங்கத்தால் தொடர்ந்து மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.
ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பிவரும் பயணிகள் தொடர்பிலான தனிமைப்படுத்தல் மற்றும் சோதனை நடவடிக்கைகள் மாநில மற்றும் பிராந்திய அரசாங்கங்களால் நிர்வகிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன.
இதன்படி குயின்ஸ்லாந்து, மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் NSW மாநிலங்கள் வாரமொன்றுக்கு அனுமதிக்கும் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கையை பெப்ரவரி வரை அரைவாசியாக குறைத்துள்ளன.
மேற்கு ஆஸ்திரேலியா- 512
NSW-1,505
குயின்ஸ்லாந்து-500
விக்டோரியா தொடர்ந்தும் வாரமொன்றுக்கு 490 பயணிகளை அனுமதிக்கும்.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.