கொரோனா தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அரச கொடுப்பனவில் தற்காலிக விசா மற்றும் bridging விசாவில் உள்ள பத்துலட்சத்துக்கும் மேற்பட்டவர்களும் சேர்த்துக்கொள்ளப்படவேண்டும் என்று சுமார் 200 சமூக அமைப்புக்கள் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிஸனுக்கு கடிதம் எழுதியிருக்கின்றன.
நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட நாட்டுமக்களுக்கும் ஏனைய தரப்பினருக்கும் பொருளாதார ரீதியில் உதவி வழங்குவதற்கு முடிவெடுத்துள்ள அரசு, தற்காலிக விசா மற்றும் bridging விசாவில் உள்ளவர்களை தவிர்ப்பது நியாயமாகாது என்று இந்த அமைப்புக்கள் கையெழுத்திட்டு பிரதமருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தெரிவித்திருக்கின்றன.
மேலும் - 'ஆஸ்திரேலியா உட்பட உலகமெங்கும் பரவி வருகின்ற கொரோனா தொற்றானது இன்று பொதுவான பாடமொன்றை எல்லோருக்கும் புகட்டியிருக்கிறது. அதாவது, தேவைகளோடு அங்கலாய்த்துக்கொண்டிருக்கும் சமூகமொன்றை நாங்கள் எவ்வாறு கையாளுகிறோம், அதற்கான பொறிமுறைகளை நாங்கள் எவ்வாறு உருவாக்கிக்கொள்கிறோம் என்பது இந்த மாதிரியான சூழ்நிலையில் மிகவும் முக்கியமானது. பொறுப்புள்ள அரசுகள் இந்த விடயத்தில் தப்பிக்கொள்ள முயற்சிக்கக்கூடாது'.
'சவுதி, கட்டார் போன்ற நாடுகளில் வெளிநாட்டு தொழிலாளர்கள் போதிய வசதிகளின்றி ஒரே இடத்தில் பெருமளவானவர்கள் வசித்து வந்ததால் அந்த நாடுகளில் நோய்த்தொற்று பெருகுவதற்கு காரணமாக இருந்திருக்கிறது. இதனை படிப்பினையாகக் கொண்டு ஆஸ்திரேலிய அரசு செயற்படவேண்டும்'.
'தற்காலிக மற்றும் bridging விசாவில் உள்ளவர்கள் மருத்துவ வசதிகளோ திடமான வருமானங்களோ இல்லாமல் தற்போதைய நோய்த்தொற்றுக்காலத்தில் பெரும் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளனர். இந்த நாட்டில் தஞ்சம்கோரியுள்ள இவர்கள் அரசாங்கம் விடுத்துவருகின்ற தனிமைப்படுத்தும் அறிவித்தல்கள் மற்றும் சுகாதர நடைமுறைகளை பின்பற்றவேண்டியவர்களாகவும் அதேவேளை தனிவாழ்வில் போராடவேண்டியவர்களாகவும் உள்ளார்கள். இவர்களுக்கான நிதியாதாரங்களை உறுதிப்படுத்தவது ஆஸ்திரேலிய அரசின் கடமையாகும்'
என்று இந்த அமைப்புக்கள் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தால் உங்களது மருத்துவரையோ அல்லது 1800 020 080 என்ற இலக்கத்தையோ அழையுங்கள்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
