சிட்னி Moonee Beach பகுதியில் அலையில் அடித்துச்செல்லப்பட்ட மூன்று சிறுவர்களை காப்பாற்றுவதற்காக கடலுக்குள் பாய்ந்த மூன்று இந்தியர்களில் இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மற்றையவரை தேடும் பணிகள் தொடர்ந்தவண்ணமுள்ளன.
இந்தச்சம்பவம் கடந்த திங்கட்கிழமை மாலை ஆறுமணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்தச்சம்பவத்தில், இந்தியப் பின்னணி கொண்ட சகோதரர்களான இரு சிறுமிகளும் ஒரு சிறுவனும் அலையில் அடித்துச்செல்லப்பட்டவுடன், அவர்களது தந்தையும் இரண்டு உறவினர்களும் கடலில் பாய்ந்து காப்பாற்றுவதற்காக முயற்சித்திருக்கிறார்கள். ஒருகட்டத்தில் எல்லோரையும் அலையடித்துச்சென்றுவிட்டது.
பின்னர், ஒரு சிறுமியும் சிறுவனும் கரையொதுங்கியிருக்கிறார்கள். மற்றைய சிறுமி மீட்புக்குழுவினரால் மீட்கப்பட்டுள்ளார்.
இவர்களை காப்பாற்றுவதற்காக சென்றவர்களில் சிறுவர்களின் தந்தையும் ஒரு உறவினரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். மற்றைய நபரை மீட்புப்பணியாளர்கள் கடந்த மூன்று நாட்களாக தேடிவருகின்றபோதும் கண்டுபிடிக்கமுடியவில்லை. அநேகமாக அவர் இறந்திருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.
இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு கல்விகற்பதற்காக வந்த இவருக்கு வயது 28 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட சிறுவர்கள் மூவரும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உயிராபத்து எதுவுமில்லை என்று வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிசெய்துள்ளன.
Share
