கொங்கோ, இலங்கை போன்ற போர்க்குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு ஆஸ்திரேலியா இரகசியமாக ஆயுதங்களை விற்பனை செய்வதாக ஆஸ்திரேலியாவை தளமாக கொண்டு இயங்கும் மனித உரிமை அமைப்புக்கள் கடும் கண்டனம் வெளியிட்டிருக்கின்றன.
குறிப்பாக கொங்கோ போன்ற மிகப்பெரிய மனிதப்பேரவலங்கள் கண்ணெதிரே நடைபெற்றுக்கொண்டிருக்கும் நாட்டுக்கு ஆஸ்திரேலியா ஆயுதங்களை ஏற்றுமதி செய்கிறது என்பதை நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை என்று இந்த அமைப்புக்கள் கவலை தெரிவித்துள்ளன.
கடந்த 2018 - 2019 ஆம் ஆண்டு நிதியாண்டில், ஆயுதங்களை விற்பனை செய்வதற்கான 14 அனுமதிப்பத்திரங்களை(permits) இலங்கைக்கும், 45 அனுமதிப்பத்திரங்களை UAE-க்கும், 23 அனுமதிப்பத்திரங்களை சவுதிக்கும், நான்கு அனுமதிப்பத்திரங்களை கொங்கோ நாட்டுக்கும் ஆஸ்திரேலியா வழங்கியிருக்கிறது.
இப்படியான நாடுகளுக்கு, நாட்டின் பாதுகாப்புத்துறை சார்ந்த இரகசிய பரிவர்த்தனை உடன்படிக்கைகயின் கீழ் ஆஸ்திரேலியா ஆயுதங்களை விற்பனை செய்வது அதிர்ச்சி அளிக்கிறது என்று Save the Children அமைப்பின் ஆஸ்திரேலிய கிளை தெரிவித்துள்ளது.
பாரிய மனித உரிமை மீறல்கள் மேற்கொள்ளப்படுகின்ற மேற்படி நாடுகளிலிருந்து வெளியேறி பெருந்தொகையானவர்கள் வேறு நாடுகளில் தஞ்மடைந்திருக்கும்போது மனித உரிமைகளை பாதுகாக்கவேண்டிய கடப்பாடுடைய ஆஸ்திரேலியா குறிப்பிட்ட நாடுகளுக்கு ஆயுதங்களை விற்பது கண்டனத்துக்குரியது என்று Save the Children அமைப்பின் ஆஸ்திரேலிய கிளை சார்பில் பேசவல்ல Paul Ronalds தெரிவித்துள்ளார் என்று The Guardian செய்தி வெளியிட்டுள்ளது.
