ஆஸ்திரேலியாவில் தற்காலிகமாக தங்கியிருந்து வேலை பார்ப்பதற்கான வீசாவே 457 வீசா என அழைக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 50ஆயிரம் 457 வீசா விண்ணப்பங்கள் ஆஸ்திரேலிய குடிவரவுத் திணைக்களத்தில் தாக்கல் செய்யப்படுகின்றன.
குறிப்பிட்ட ஒரு தொழிலைச் செய்வதற்கு நாட்டிற்குள் ஒருவரைக் கண்டுபிடிக்க முடியாத பட்சத்தில் வெளிநாட்டிலிருந்து பணியாளர்களை வரவழைப்பதற்கு இந்த 457 வீசா வழிசமைக்கிறது.
ஆனால் கடந்த 2013 ஜுலை 1ம் திகதி முதல் இந்த 457 வீசா நடைமுறையில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிட்னிவாழ் சட்டத்தரணி Judit Albecz (MARA 0901615) தெரிவித்துள்ளார். 457 வீசா தொடர்பில் இடம்பெறும் மோசடிகளைத் தடுக்கும் நோக்கிலேயே இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
அதில் முக்கியமானது வெளிநாட்டிலிருந்து வேலைக்கு அழைக்கப்படுபவரின் தொழிலானது ஆஸ்திரேலிய அரசால் வெளியிடப்படும் Consolidated Sponsored Occupations List (CSOL) என்ற தொழிற்பட்டியலிலும் இருக்க வேண்டுமென்பதாகும். இந்த தொழிற்பட்டியலை குடிவரவுத் திணைக்களத்தின் இணையத்தளத்தில் பார்வையிடலாம். http://www.border.gov.au/Trav/Visa-1/457-
சரி இப்போது 457 வீசாவுக்கு எப்படி விண்ணப்பிப்பது என்று பார்ப்போம். இதற்கு பொதுவாக கையாளப்படும் வழி Standard business sponsorship என்ற வழியாகும்.
இதன்கீழ் குறிப்பிட்ட ஒரு வியாபார நிறுவனம் தனக்குத் தேவையான பணியாளர் ஒருவரை ஆஸ்திரேலியாவில் உண்மையிலேயே கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் அப்பணிக்கு வெளிநாட்டிலிருந்து ஆட்களை வருவிக்க முடியும். அப்படியான சந்தர்ப்பத்தில் அந்த நிறுவனம் ஒன்றினூடாக ஒருவர் 457 வீசாவுக்கு விண்ணப்பிக்க முடியும்.
இதற்கு 3 படிமுறைகள் இருக்கின்றன.
முதலாவதாக Standard business sponsor என்ற தகுதியைப் பெறுவதற்கான அனுமதி கோரி குடிவரவுத் திணைக்களத்தில் குறித்த வியாபார நிறுவனம் விண்ணப்பம் ஒன்றைத் தாக்கல் செய்ய வேண்டும். இந்த விண்ணப்பத்தைத் தாக்கல் செய்யும் முன் ஆஸ்திரேலிய சட்டதிட்டங்களுக்கிசைவாக தனது நிறுவனம் செயற்படுகிறதா என்பதை சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் உறுதிப்படுத்திக்கொள்ள வெண்டும். மேலும் ஆஸ்திரேலியச் சட்டத்தின்படி வெளிநாட்டுப் பணியாளருக்கான பணியிட பாதுகாப்பு, பணியிட உரிமை உள்ளிட்ட கடப்பாடுகளை குறிப்பிட்ட வியாபார நிறுவனம் பூர்த்தி செய்ய வேண்டும்.
இரண்டாவதாக குறித்த நிறுவனம் இந்தப் பணிக்காக இந்த நபரை வெளிநாட்டிலிருந்து வரவழைக்கப்போகிறோம் என்பதற்கான பரிந்துரை (Nomination) விண்ணப்பத்தை தாக்கல் செய்ய வேண்டும்.
பரிந்துரை(Nomination) விண்ணப்பமும் அங்கீகரிக்கப்பட்ட பின் இறுதிக்கட்டமாக வெளிநாட்டிலிருக்கும் குறித்த பணியாளர் 457 வீசாவுக்குரிய விண்ணப்பத்தைத் தாக்கல் செய்ய வேண்டும்.

Source: AAP

Source: AAP
சம்பந்தப்பட்ட வியாபார நிறுவனம் மற்றும் பணியாளர் ஆகிய இருதரப்புமே குடிவரவுத்திணைக்களத்தில் விண்ணப்பங்களைத் தாக்கல் செய்ய வேண்டுமென்பதை மறந்துவிடக்கூடாது.
Standard business sponsor விண்ணப்பமும் பரிந்துரை(Nomination) விண்ணப்பமும் குடிவரவுத் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்படாத பட்சத்தில் பணியாளர் தாக்கல் செய்யும் 457 வீசா விண்ணப்பம் மேற்கொண்டு பரிசீலிக்கப்படாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

Source: SBS
வேண்டுமானால் Standard business sponsor விண்ணப்பம், பரிந்துரை(Nomination) விண்ணப்பம் மற்றும் வெளிநாடு வாழ் பணியாளரின் 457 வீசா விண்ணப்பம் ஆகிய மூன்றையும் ஒன்றாகத் தாக்கல் செய்யலாம்.
ஆனால் Standard business sponsor விண்ணப்பம் அங்கீகரிக்கப்படவில்லை என்றால் ஏனைய விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டுவிடும். விண்ணப்பக்கட்டணமும் மீளளிக்கப்பட மாட்டாது.
இதேவேளை 457 வீசாவுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரருக்கு குறைந்தபட்ச ஆங்கில மொழிப்புலமை,தொழில்சார் தகைமை மற்றும் அனுபவம், போதுமான சுகாதாரக் காப்பீடு மற்றும் பரிந்துரைக்கப்பட்ட வேலையைச் செய்வதற்கான உண்மையான விருப்பம் ஆகியவை இருக்க வேண்டும்.
இவற்றுடன் மேற்குறிப்பிட்ட 3 விண்ணப்பங்களுக்குமான விண்ணப்பத்தொகையையும் செலுத்த வேண்டும்.
அங்கீகரிக்கப்படும் விண்ணப்பதாரருக்கு 4 வருடங்கள் வரை ஆஸ்திரேலியாவில் தங்கி வேலை பார்ப்பதற்கு வீசா வழங்கப்படும்.
அதேநேரம் 457 வீசாவில் இங்கு வருபவர் தன்னைச் சார்ந்து வாழ்பவர்களை(dependents) அவர்களும் தகுதிபெறும் பட்சத்தில் இங்கு அழைத்து வரலாம். அவர்கள் இங்கே வேலை பார்க்கலாம் அல்லது படிக்கலாம். ஆனால் கல்விச் செலவை அவர்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும் அவர்கள் இங்கே தங்கியிருக்கும் காலப்பகுதியில் நாட்டிற்கு வெளியே எப்போது வேண்டுமானாலும் போய் வரலாம்.
457 வீசா பற்றிய மேலதிக விபரங்கள் மற்றும் ஆஸ்திரேலிய அரசின் Consolidated Sponsored Occupations List (CSOL) தொழிற்பட்டியலைப் பார்வையிட http://www.border.gov.au/Trav/Visa-1/457- என்ற இணையத்தளத்திற்குச் செல்லுங்கள்.
Share
