முதன்முதலாக ஆஸ்திரேலியாவில் வீடு ஒன்றை வாங்குவதென்பது அத்தனை இலகுவானதல்ல.
அதிலும் குறிப்பாக அதிகரித்து வரும் வீட்டு விலைகள் இதை இன்னும் கடினமாக்குகின்றன.
ஆனால் அன்றாட வாழ்க்கைச் செலவில் சில மாறுதல்களைச் செய்து வீடு வாங்குவதற்கென பணத்தை சேமிக்க ஆரம்பிப்பது இதற்கான முதற்படி.

Source: Getty Images
உங்கள் கனவு இல்லத்தின் புகைப்படங்களை வைத்திருப்பது வீட்டுக்கான பணத்தைச் சேமிப்பதற்கு ஒரு உந்துசக்தியாக இருக்கும்.
இதேவேளை ஆஸ்திரேலியாவில் வீடு ஒன்றை வாங்கும் போது மொத்தத்தொகையின் 10 வீதத்தை முன்பணமாக செலுத்த வேண்டும்.
ஆனால் 20 வீதத்தை முன்பணமாக செலுத்துவதன் மூலம் வீட்டுக்கடன் காப்புறுதிக்கான மேலதிக செலவுகளைத் தவிர்க்க முடியும்.
ஒருவழியாக வீடு வாங்குவதற்கான முன்பணத்தைச் சேமித்துவிட்டீர்கள் என்றால் அடுத்த கட்டம் வீட்டுக்கடனுக்கு விண்ணப்பிப்பதாகும்.

Source: Getty Images
ஆஸ்திரேலியாவில் முதன்முதலாக வீடு வாங்கும் ஒருவருக்கு 'First home owner grants' எனப்படும் அரச உதவி வழங்கப்படும். எல்லா மாநிலங்களிலும் இந்த நடைமுறை இருந்தாலும் எவ்வளவு தொகை வழங்கப்படும் என்பது மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும்.
இதன் பின்னர் வீட்டு விலைகள் எப்படி இருக்கின்றன என்பதை ஒப்பிடுவதற்கு பல இடங்களுக்குச் சென்று விற்பனைக்குள்ள வீடுகளைப் பார்க்க வேண்டும்.

Source: AAP
அவ்வாறு பார்க்கும் போது ஒரு Check list உருவாக்கிக் கொள்ள வேண்டும். பார்த்த வீடுகளைப் புகைப்படம் எடுப்பதுடன் அவற்றில் என்னென்ன பிடித்திருக்கின்றன என்னென்ன பிடிக்கவில்லை என்பதையும் குறித்துக் கொள்ளுங்கள்.
உங்களுக்கு ஏதாவதொரு வீடு பிடித்திருந்தால் அந்த வீட்டிற்கு அருகில் வசிப்பவர்களிடம் விசாரித்துப் பார்ப்பது சிறந்தது. வீட்டு முகவர் குறிப்பிட்ட தகவல்களை விட மேலதிக தகவல்களை அயலவர்கள் தரக்கூடும்.
நீங்கள் வாங்குவதற்கென தெரிவுசெய்த வீட்டிற்கான Building and Pest inspection- கட்டட மற்றும் பூச்சி ஆய்வுகளுக்கு பணத்தைச் செலவிடுவது மிகவும் பயன்தரும். இதன் மூலம் வீடு வாங்கிய பின் ஏற்படும் வீண் செலவுகளைத் தவிர்க்கலாம்.

Source: Getty Images
அத்துடன் Strata Title searches, council building certificates, drainage diagrams, State Traffic Authority மற்றும் Water Board விவகாரங்களைக் கையாளுவதற்கும் அதற்குரிய துறைசார் நிபுணத்துவம் பெற்றவர்களின் உதவியை நாடுவது அவசியம்.
அதேபோல் பணப்பரிமாற்றம் மற்றும் வீட்டுப்பத்திரங்களை பதிவு செய்யும் போது ஒரு சட்ட ஆலோசகரை ஈடுபடுத்துவது முக்கியமானது.
இதேவேளை ஏலத்தில் வீடு வாங்குவது மிகவும் கடினமானதும் கவனமாக கையாளப்படவேண்டிய விடயமுமாகும். எனவே ஏலத்திற்கு செல்வதற்கு முன் நன்கு ஆலோசித்து எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது அவசியம்.

Source: AAP
ஆஸ்திரேலியாவில் முதன் முதலாக வீடு வாங்கத் திட்டமிடுபவர்களுக்கான உதவிகளை கீழ்க்காணும் இணையத்தளங்களில் பெற்றுக் கொள்ளலாம்.