நமது பெற்றோரை ஆஸ்திரேலியாவுக்கு பெற்றோர் விசாவில் வரவழைப்பதென்பது மிகுந்த செலவு மிக்கதும் நீண்ட நாட்கள் எடுக்கும் ஒரு செயற்பாடாகவும் மாறிவிட்டது.
தற்போதைய நிலவரப்படி ஆஸ்திரேலியாவில் பெற்றோர் விசாவூடாக நிரந்தர வதிவிடம் பெறுவதற்கு 40 ஆயிரம் பெற்றோர் 30 வருடங்கள் வரைக்கும் காத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.
இந்தப் பின்னணியில் பெற்றோர் விசாவை விரைவாகப் பெறுவதற்கு வழி இருக்கிறதா எனப் பார்ப்போம்.

Source: SBS
ஆஸ்திரேலியாவுக்கான பெற்றோர் விசா முக்கியமாக இரண்டு வகைப்படும். ஒன்று Non-contributory மற்றையது Contributory.
Non-contributory வகையில் 103 மற்றும் 804 என்ற permanent subclasses இருக்கின்றன.
இந்த பிரிவுகளில் விண்ணப்பிப்பது செலவு குறைவு என்றாலும் இதனைப் பெறுவதற்கு நீண்ட காலம் காத்திருக்க வேண்டும்.
அதேபோல் Contributory விசாவின் கீழ் 143, 173, 864, 884 ஆகிய பிரிவுகள் இருக்கின்றன.
இதில் 143 மற்றும் 864 ஆகியன நிரந்தரமாக தங்கியிருப்பதற்கான விசா. 173 மற்றும் 884 ஆகியன இரு வருடங்களுக்கான தற்காலிக விசா.
இந்த வகை விசாக்களை விரைவாகப் பெறலாம். ஆனால் பணம் அதிகமாக செலவிட வேண்டும். அதாவது 45 ஆயிரம் டொலர்கள் முதல் 55 ஆயிரம் டொலர்கள் வரை செலவாகும்
ஆனால் Non-contributory வகை விசாவுக்கு விண்ணப்பிக்கும் போது 3,900 - 6000 டொலர்கள் வரைதான் செலவாகும்.
இந்த விசாவுக்கு விண்ணப்பித்த பின்னர் நிரந்தர வதிவிடம் பெறும் வரை அவர்கள் bridging விசாவில் இங்கே தங்கியிருக்கலாம்.
இது செலவு குறைந்த விசா வகை என்ற போதிலும் இதில் சில ஆபத்துக்களும் இருக்கின்றன.
இந்த விசாவுக்கு விண்ணப்பிக்கும் போதும், பின்பு விசா கிடைக்கும் போதும் மருத்துவ மற்றும் நன்னடத்தை (Health and Character)பரிசோதனை செய்ய வேண்டும். உதாரணத்திற்கு இந்த விசாவுக்கு விண்ணப்பித்து 20 வருடங்கள் காத்திருக்கும் ஒருவர் மருத்துவ பரிசோதனையில் தோற்றுவிட்டார் என்றால் அவருக்கு விசா வழங்கப்பட மாட்டாது.

Australian visa form Source: AAP
இந்தக் காரணத்தாலும் பல வருடங்கள் காத்திருக்க வேண்டுமென்பதாலும் பல பிள்ளைகள் ஒரு பெற்றோருக்கு 47 ஆயிரம் டொலர் வரை பணத்தைச் செலுத்தி Contributory விசா விண்ணப்பத்தை தாக்கல் செய்கின்றனர்.2 வருடங்களுக்குள் இந்த விசா வழங்கப்பட்டுவிடும்.
ஆனால் எல்லோராலும் 1 லட்சம் டொலர்கள் செலவழித்து தமது பெற்றோரை இங்கு வரவழைக்க முடியாது. இதற்கு இன்னுமொரு மாற்று வழி இருக்கின்றது.

Australian currency pictured in Sydney, Thursday, Sept. 11, 2014. (AAP Image/Joel Carrett) NO ARCHIVING Source: AAP
உங்கள் பெற்றோர் வேலை செய்யக்கூடிய வயது வரம்பிற்குள் இருந்தால் 173 அல்லது 884 பிரிவுகளின் கீழ் விண்ணப்பித்து இங்கே வரலாம். இதற்கு முதலில் 29 ஆயிரம் டொலர்கள் வரை செலவாகும். இரண்டு வருட விசாவில் பெற்றோர் இங்கு வந்த பின்னர் அவர்கள் இங்கே வேலை செய்யலாம் என்பதுடன் அவர்களுக்கான மெடிகெயார் சலுகையும் கிடைக்கும்.
அதன் பின்னர் permanent subclass 143 விசாவுக்கு 19 ஆயிரம் டொலர்கள் செலுத்தி அவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதேவேளை Non-contributory , Contributory ஆகிய இரு பிரிவுகளிலும் விசா விண்ணப்பங்களைத் தாக்கல் செய்வதற்கான நடைமுறை ஒரேமாதிரியானதாகும்.

Source: Getty Images
ஆஸ்திரேலிய குடியுரிமை அல்லது நிரந்தர வதிவிட உரிமை அல்லது நியூசிலாந்து குடியுரிமை உள்ள ஒருவர் மட்டுமே தமது பெற்றோரை sponsor செய்ய முடியும்.
அத்துடன் குடும்ப சமநிலையையும் உறுதிப்படுத்த வேண்டும். உதாரணமாக குறித்த பெற்றோருக்கு 3 பிள்ளைகள் என்றால் இருவர் ஆஸ்திரேலியாவில் இருக்க வேண்டும்.
அதேபோல் மருத்துவ பரிசோதனையிலும் வெற்றிபெற வேண்டும்.
அத்துடன் Assurance of Support- வாழ்வாதாரத்திற்கான உத்தரவாதமும் வழங்கப்பட வேண்டும். இதன்படி Contributory விசாவுக்கு விண்ணப்பிப்பவர்கள் தாய் தந்தைக்கென 14 ஆயிரம் டொலர்களை Bond பணமாக Centrelink க்கு செலுத்த வேண்டும். 10 வருடங்களுக்கு இத்தொகை Centrelink இடம் இருக்கும்.
அதேபோல் Non-contributory விசாவுக்கு விண்ணப்பிப்பவர்கள் தாய் தந்தைக்கென 7 ஆயிரம் டொலர்களை Bond பணமாக Centrelink க்கு செலுத்த வேண்டும். 2 வருடங்களுக்கு இத்தொகை Centrelink இடம் இருக்கும்.
தற்போதைய நிலவரப்படி 40 ஆயிரம் பெற்றோர் Non-contributory விசாவுக்கு விண்ணப்பித்துவிட்டு காத்திருக்கின்றனர். ஆண்டு ஒன்றுக்கு 1500 Non-contributory பெற்றோர் விசாக்களே அங்கீகரிக்கப்படுவதால் இவர்களுக்கான நிரந்தர வதிவிடம் கிடைப்பதற்கு 30 ஆண்டுகளுக்கு மேல் எடுக்குமென குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Source: AAP
ஆனால் ஆண்டொன்றுக்கு 7175 Contributory பெற்றோர் விசாக்கள் வழங்கப்படுவதால் 1-2 வருடங்களுக்குள் இதனைப் பெற்றுவிடலாம் எனவும் குடிவரவுத் திணைக்களம் கூறியுள்ளது. ஆனால் இதற்கு பணம் தான் அதிகம் செலவாகும்.