ஒரு சமூகமாக அனைவரும் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொள்கிற போது நோய்கள் பரவுவதும் தடுக்கப்படும் என்பது உலக சுகாதார நிறுவனத்தின் கூற்று.
அதுதான் உண்மையும்கூட. ஒரு தனிமனிதன் நோய்த்தடுப்பூசிகளைப் போட்டு தொற்றுநோய்களிலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும் போது அது அவனைச் சுற்றியுள்ள ஏனையவர்களுக்கும் நன்மை பயக்கின்றது.
ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை 93 வீதமான சிறுவர்கள் நோய்த்தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வதாக Australian Childhood Immunisation Register சொல்கிறது.

Source: AAP
தடுப்பூசி போட்டுக்கொள்ளும் வீதம் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்டாலும் முதலிடத்தில் இருப்பது ACT பிராந்தியம் ஆகும்.
இதேவேளை உரிய நேரத்தில் நோய்த்தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தவறியவர்களுக்கு உதவ தேசிய தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டம் NIP தயாராக உள்ளது.
ஆனால் நீங்களும் உங்கள் பிள்ளைகளும் என்னென்ன தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டீர்கள் என்னென்னவற்றைத் தவறவிட்டீர்கள் என்பதை கவனமாக குறித்து வைத்துக்கொள்வது அவசியம்.
அடுத்த ஆண்டு டிசம்பர் வரை 20 வயதுக்கு கீழ்ப்பட்ட அனைவருக்கும் நோய்த்தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படுகிறது.

Source: Getty Images
ஆனால் 10 வயதுக்கு குறைந்தவர்களுக்கு எக்காலத்திலும் தடுப்பூசிகள் இலவசம்.
உங்கள் குடும்ப வைத்தியர், மருத்துவ நிலையங்கள், மருத்துவ முகாம்கள் என பல வழிகளினூடாக நோய்த்தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
சிறுவர்கள் மட்டுமல்ல இளைஞர்களும் தமக்கான தடுப்பூசிகள் ஒழுங்காக போடப்பட்டிருக்கின்றனவா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
உதாரணமாக Measles எனப்படும் தட்டம்மை நோய்த்தடுப்பூசி நீங்கள் போட்டிருக்கவில்லை என்றால் நீங்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் போது இந்த நோய்க்கிருமிகள் உங்களுடன் தொற்றிக்கொண்டு வரக்கூடும்.
எனவே வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்பவர்கள் தேவையான தடுப்பூசிகளை பயணம் மேற்கொள்வதற்கு 6 முதல் 8 வாரத்திற்கு முன்னரேயே போட்டுக்கொள்ள வேண்டும்.
இதேவேளை தகுந்த காரணங்களின்றி பிள்ளைகளுக்கு தடுப்பூசிகள் போட்டுக்கொள்ளாத பெற்றோர் தமது பிள்ளைகளுக்கான அரச கொடுப்பனவுகளை(Child Care Benefit (CCB), Child Care Rebate (CCR) and the Family Tax Benefit (FTB) Part A end of year supplement) பெற முடியாதென்பது சட்டமாகும்.

Source: liberal.org
அதேநேரம் தமது கண்காணிப்பின் கீழ் உள்ளவர்கள் நோய்த்தடுப்பூசிகளை போட்டுக்கொண்டார்களா என்பதை மருத்துவர்களும் மருத்துவ நிலையங்களும் கண்காணிக்க வேண்டுமென அரசு வலியுறுத்தியுள்ளது.
அத்துடன் தடுப்பூசிகளைத் தவறவிட்ட சிறுவர்களுக்கு அதனை வழங்கும் மருத்துவர்கள் மற்றும் தடுப்பூசி வழங்குநர்களுக்கு ஜுலை 1ம் திகதியிலிருந்து ஊக்குவிப்புத் தொகை ஒன்றையும் அரசு கொடுக்கவுள்ளது.
ஒருவேளை நீங்கள் வெளிநாட்டில் தடுப்பூசிகளைப் பெற்றிருந்தால் அவற்றை ஆஸ்திரேலியாவில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

Source: AAP
இந்த நிலையில் முக்கியமான ஒரு தடுப்பூசியை போட்டுக்கொண்டீர்களா இல்லையா என்பது நினைவில்லை என்றாலோ அல்லது அதற்கான பதிவுகள் எதுவும் இல்லையென்றாலோ அத்தடுப்பூசியை மீண்டும் போட்டுக் கொள்வது சிறந்தது என ஊக்கப்படுத்தப்படுகிறது.
நாட்டிலுள்ள குழந்தைகள் அனைவரும் தடுப்பூசிகள் பெற்றிருக்கிறார்களா என்பதை மெடிகெயார் ஊடாக அரசு உறுதிப்படுத்திக் கொள்கிறது.
மேலும் இவ்வருட இறுதிக்குள் நாட்டு மக்கள் அனைவருடைய தடுப்பூசி குறித்த தரவுகளும் உள்வாங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
நீங்கள் ஆஸ்திரேலியாவிற்குப் புதியவர் என்றால் நோய்த்தடுப்பூசிகள் பற்றிய விபரங்களை அறிந்து கொள்வதற்கு NIP இணையத்தளத்திற்கு செல்லுங்கள். மொழிபெயர்ப்பு வசதி தேவைப்படின் https://www.tisnational.gov.au/என்ற இணையத்தளத்திற்குச் செல்லுங்கள்.இல்லாவிட்டால் அருகிலுள்ள மருத்துவ நிலையங்களிலோ அல்லது உங்கள் குடும்ப வைத்தியரிடமோ விபரங்களைக் கேட்டறிந்து கொள்ளுங்கள்.

Source: AAP