ஆஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் சாந்தரூபன், தொடர்ச்சியான அச்சுறுத்தல் மற்றும் தொந்தரவுக்குள்ளாவதாக முறையிடப்பட்டுள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரிவந்த சாந்தரூபன் தங்கலிங்கத்தின் புகலிடக்கோரிக்கை, கடந்த 2015 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அரசினால் நிராகரிக்கப்பட்டது. அதையடுத்து, அவரது மனு மறுபரிசீலனைக்கு விண்ணப்பிக்கப்பட்டு அதுவும் நிராகரிக்கப்பட்டதைத்தொடர்ந்து, குடிவரவுத்தடுப்புமுகாம்களில் தடுத்துவைக்கப்பட்ட சாந்தரூபன், கடந்த பெப்ரவரி 22 ஆம் திகதி நாடு கடத்தப்பட்டார்.
இவர் நீண்டகாலமாக விடுதலைப்புலிகள் அமைப்பில் உறுப்பினராக அங்கம் வகித்தவர் என்பதுடன், பல சம்பவங்களில் காயமடைந்து ஒரு கால் இயலாதநிலையில் உள்ளவர் என்பதால், இவர் நாடுகடத்தப்படும்பட்சத்தில் இலங்கையில் சிக்கல்களை எதிர்கொள்ளலாம் என அகதிகள் செயற்பாட்டாளர்கள் அச்சம் தெரிவித்திருந்ததுடன் இவரது நாடுகடத்தலுக்கெதிராக ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியிருந்தனர்.
எனினும் இவ்வெதிர்ப்பு நடவடிக்கைகளையும் மீறி நாடுகடத்தப்பட்ட சாந்தரூபன், கட்டுநாயக்கா விமானநிலையத்தில் 4 மணிநேரம் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார்.
வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்ட சாந்தரூபன் தனது சொந்த வீட்டிற்கு செல்லாது வேறொரு இடத்தில் வாழ்ந்துவரும் நிலையில், இதுவரை இருதடவைகள் சாந்தரூபன் தங்கியிருக்கும் வீட்டுக்குச் சென்ற பாதுகாப்புப்படையினர், அவரது கடந்தகாலம் பற்றி விசாரணை நடத்தியதுடன், மனைவி பிள்ளைகளின் விபரங்களையும் பெற்றுச்சென்றதாக குறிப்பிடப்படுகிறது.
பாதுகாப்புப்படையினரின் இந்நடவடிக்கைகளால் சாந்தரூபன் குடும்பம் அச்சத்தில் இருப்பதாக, சாந்தரூபன் சார்பில் வாதாடும் மனித உரிமைகள் சட்டத்தரணி ரட்னவேல் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் பாதுகாப்பு படையினரின் இந்நடவடிக்கை, அப்பட்டமான அச்சுறுத்தும் மற்றும் மிரட்டும் செயற்பாடு என தமிழ் ஏதிலிகள் கழகத்தைச் சேர்ந்த அரன் மயில்வாகனம் குற்றம்சாட்டியுள்ளார்.
இதேவேளை இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுபவர்கள் துன்புறுத்தப்படுவதாக எழும் குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசு நிராகரித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Share
