போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டில் மலேசிய தமிழர் ஒருவருக்கு சிங்கப்பூர் உயர் நீதிமன்றம் முதல் தடவையாக காணொளி அழைப்புக்களை மேற்கொள்வதற்கான செயலியான ZOOM வழியாக மரண தண்டனை தீர்ப்பை வழங்கியிருக்கிறது.
கொரோனா பரவல் காரணமாக நாட்டின் பல்வேறு செயற்பாடுகள் முடக்கப்பட்டுள்ளதால், சமூக இடைவெளியை கருத்திற்கொண்டு, ZOOM வழியாக குறித்த வழக்கு விசாரணை நடைபெற்றிருந்த பின்னணியில், இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
குற்றஞ்சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் இல்லாத நிலையில் மரண தண்டனை தீர்ப்பொன்று இவ்வாறு செயலி வழியாக வழங்கப்படுவது சிங்கப்பூரில் இதுவே முதல் நடவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2011 ஆம் ஆண்டு இடம்பெற்றதாகக்கூறப்படுகின்ற போதைப்பொருள் கடத்தல் சம்பவம் தொடர்பில் புனிதன் கணேசன் (வயது 37) என்பவருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இரண்டு தரப்புக்களுக்கு இடையிலான போதைப்பொருள் பரிவர்த்தனத்தில் தொடர்புபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் புனிதன் கணேசனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இந்தக்குற்றச்சாட்டினை புனிதன் கணேசன் முற்றாக மறுத்துள்ளார்.
குற்றம்சாட்டப்பட்டவர் குற்றத்தினை மறுத்துள்ள நிலையில் அவசர அவசரமாக ZOOM வழியாக தீர்ப்பை வழங்கியுள்ளமை குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பு மையத்தின் ஆசியக்கிளை தனது அதிருப்தியை வெளியிட்டிருக்கிறது.
தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்வது குறித்து புனிதன் கணேசன் பரிசிலீத்துவருவதாக அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
அண்மையில் நைஜீரியாவிலும் தனது முதலாளியின் தாயாரைக்கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஒருவருக்கு நைஜீரிய நீதிமன்றம் ZOOM வழியாக மரண தண்டனை தீர்ப்பை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
