ஆஸ்திரேலியா, மெல்பேர்னிலிருந்து சென்னை சென்ற தமிழ் தம்பதியினரின் 6 மாத குழந்தை விமானத்திலேயே மரணமான சம்பவம் தொடர்பில் விசாரணை நடைபெற்றுவருவதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆஸ்திரேலியாவில் IT துறையில் பணிபுரியும் சக்திமுருகன்- தீபா தம்பதியினரின் 6 மாத குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சென்னை வேங்கைவாசலைச் சேர்ந்த இத்தம்பதியர் விடுமுறையில் ஊருக்குச் செல்வதற்காக தங்களது குழந்தையுடன் மெல்பேர்னிலிருந்து மலேசியா சென்று பின்னர் அங்கிருந்து சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இறங்கியபோது கையில் இருந்த குழந்தை அசைவற்று இருந்ததைக்கண்டு உடனடியாக விமான நிலையத்தில் இருந்த மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் இரண்டு மணி நேரத்துக்கு முன்னரே குழந்தை இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
விமானத்தில் ஏறும்போது குழந்தை நன்றாக இருந்ததாகவும் பின்பு பால் குடித்துவிட்டு தூங்கிவிட்டதாகவும் கூறப்படும் நிலையில் விமான நிலைய போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.