கடந்த மூன்று வாரங்களில் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் விடுதி தனிமைப்படுத்தலில் இருக்கின்றவர்களுக்கு இந்த தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்கள் தடுப்பூசி போடும் முன்னரே தொற்றுக்கு ஆளாகியிருக்கலாம் என்று சுகாதார அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இவ்வாறு தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களில் வெளிநாடுகளில் Pfizer, AstraZeneca, Moderna ஆகிய தடுப்பூசிகளை போட்டுக்கொண்டவர்கள் ஆவர்.
கடந்த ஏப்ரல் 10 ஆம் திகதிக்கும் மே 1 ஆம் தேதிக்குமிடையில் நியூ சவுத் வேல்ஸ் விமானநிலையத்தில் வந்திறங்கியவர்களுக்கு மேற்கொண்ட சோதனையில் சுமார் 150 பேருக்கு கோவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டது. இவர்களில் ஆறுபேர் வெளிநாடுகளில் முழுமையான கோவிட் தடுப்பூசியை போட்டுக்கொண்டவர்கள் என்று நியூ சவுத் வேல்ஸ் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும் இந்த காலகட்டத்தில் தனிமைப்படுத்தலின்போது தொற்று கண்டுபிடிக்கப்பட்ட 180 பேரில் 89 பேர் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் ஆவர்.
கோவிட் தடுப்பூசிகளை முழுமையாக போட்டுக்கொண்டவர்களை, 14 நாள் விடுதி தனிமைப்படுத்தலின்றி, நாட்டுக்குள் அனுமதிப்பது குறித்து ஆஸ்திரேலிய உயர்மட்ட மருத்துவர்கள் குழு ஆராய்ந்துவருவதாக பிரதமர் ஸ்கொட் மொறிஸன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆனால் தடுப்பூசி போட்டுக்கொண்டபின்னரும் தொற்று ஏற்பட்டிருப்பதால் தடுப்பூசி கடவுச்சீட்டு முறையை அறிமுகம் செய்யும் திட்டத்தை மீள்பரீசிலனை செய்யவேண்டிய நிலைக்கு அரசு தள்ளப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
