உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான Apple நிறுவனம் அதன் பழைய iPhoneகளை வேண்டுமென்றே மெதுவாக இயங்க செய்தது என்ற குற்றச் சாட்டில் 41 மில்லியன் டொலர் அபராதம் செலுத்த ஒப்புக் கொண்டுள்ளது.
தரமான செயலி (Quality Software), நம்பிக்கையான இலத்திரனியல் கருவிகள் என்பவற்றிற்கு Apple நிறுவனம் அதன் பயனாளர்களிடையே தனி இரசிகர் கூட்டமே இருக்கிறது. என்ன விலை என்றாலும் கண்ணை மூடிக் கொண்டு புதிய பொருட்களை அவர்கள் வாங்குவார்கள். இருந்தாலும், 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், Apple நிறுவனத்தின் iPhoneகளில், 10.2.1 மற்றும் 11.2 இயக்க முறைக்கு (operating system) மாற்றியவர்கள் அவர்களது iPhoneனின் செயல் வேகம் குறைந்து விட்டதாக முறைப்பட்டார்கள். அதோடு iPhoneகளின் மின்கலன்கள் (battery) நேரமும் கணிசமாகக் குறைந்து விட்டதாகச் சொன்னார்கள். இந்த பிரச்னையை, Halt Planned Obsolescence (HOP) association என்கிற அமைப்பு உலகறியச் செய்தது.
அத்துடன் அவர்கள் நின்று விடவில்லை. இப்படி இயக்க முறையை புதுப்பித்தவர்களது iPhoneகளின் வேகம் குறைவதனால், விரைவில் புதிய iPhone வாங்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறார்கள் என்று HOP குற்றம் சாட்டியது. அதைத் தொடர்ந்து, Apple நிறுவனம் தனது இயக்க முறையை (iOSஐ) மாற்றியமைத்தது. அத்துடன், பழைய மின்கலங்களை மாற்றிக் கொடுக்கவும் முன் வந்தது.
Apple நிறுவனம் தனது தவறுகளைச் சரி செய்து கொண்டிருந்த அதே வேளை, HOP அமைப்பின் கோரிக்கையை ஏற்று 2018 ஆம் ஆண்டு, ஜனவரியில் ஃப்ரான்ஸ் நாட்டு அரசின் நுகர்வோர் பாதுகாப்புத் துறையான Directorate General for Competition, Consumption and the Repression of Fraud (DGCCRF), தனது விசாரணையை ஆரம்பித்தது.
பல கட்ட விசாரணைகளுக்குப் பின், Apple நிறுவனம் தவறு செய்திருப்பதாக DGCCRF தீர்ப்புச் சொல்லி இருக்கிறது.
விசாரணையின் முடிவில், Apple நிறுவனத்தின் பழைய iPhoneகளில், மேலே சொன்ன 10.2.1 மற்றும் 11.2 iOS இயக்கு முறையை பயன்படுத்தினால் அவற்றின் வேகம் குறைந்து விடும் என்பதை பயனாளர்களிடம் Apple நிறுவனம் எச்சரிக்கவில்லை என்பதை உறுதி செய்துள்ளார்கள். அதனை Apple நிறுவனமும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அத்துடன், ஃப்ரான்ஸ் நாடு விதித்திருக்கும் 25 மில்லியன் யூரோ (41 மில்லியன் ஆஸ்திரேலிய டொலர்) அபராதத்தையும் செலுத்த Apple நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.
