ஆஸ்திரேலிய விமானநிலையங்களின் வழியாக சட்டவிரோதமான பொருட்களைக்கொண்டுவருதல் மற்றும் பாரதூரமான நோய்களோடு பயணிகள் வருகை தருதல் ஆகியவற்றை கண்டுபிடித்து தடுப்பதற்கு பாதுகாப்பு அதிகாரிகள் மோப்ப நாய்களை பயன்படுத்துவது வழக்கமான ஒன்று.
ஆனால், சுகி (SUKI) எனப்படுகின்ற மோப்ப நாய் இந்த தொழிலுக்கு பயிற்றப்பட்டு ஒரு மாதத்தில் சரியாக 69 தடவைகள் சந்தேகத்துக்கிடமான அடையாளங்களை கண்டுபிடித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் டார்வின் விமானநிலையத்தில் இடம்பெற்றிருக்கிறது.
டார்வின் சர்வதேச விமானநிலையத்தில் மோப்ப நாய்களை பயன்படுத்தி பயணிகளை சோதனை செய்வது முன்னொருபோதும் நடைபெறவில்லை. ஆனால், சீனா, பாலி, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்து வருகின்ற விமானங்கள் அங்கு தரையிறங்குவதால், அந்நாடுகளிலிருந்து பரவும் நோய்கள் மற்றும் கொண்டுவரப்படும் உணவுப்பொருட்கள் ஆகியவை தொடர்பில் இறுக்கமான சோதனைகளை மேற்கொள்ளும்பொருட்டு "சுகி" அங்கு அனுப்பிவைக்கப்பட்டது.
விமானநிலையத்தரவுகளின்படி, "சுகி" அங்கு பணிக்கு சேர்ந்த நாள் முதல், பயணிகளிடமிருந்து சந்தேகத்துக்கிடமான பொருட்களை கைப்பற்றும் சம்பவங்கள் 25 வீதத்தினால் அதிகரித்துள்ளது.
46 தடவைகள் மோப்பம் பிடிக்கப்பட்ட சம்பவங்களில் 69 பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றில் மூன்று பன்றி இறைச்சியுடன் தொடர்புடையவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகியைப்போல பயிற்றப்பட்டுள்ள JD என்ற மோப்பநாய் Cairns விமானநிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
