NSW மாநிலத்தின் மத்திய மேற்கு பகுதியில், வெள்ளநீரில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட 28 வயது பெண்ணின் குடும்பத்திற்கு, NSW Premier Dominic Perrottet தனது இரங்கலை தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை Mudgeeக்கு வடக்கே, சுமார் 30 கிமீ தொலைவில் உள்ள Gulgongஇல் நீரில் அடித்துச் செல்லப்பட்ட காரில் பயணம் செய்தவரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்தப்பின்னணியில் வெள்ளநீரில் வாகனம் ஓட்ட வேண்டாம் என Premier Dominic Perrottet மக்களை கேட்டுக் கொண்டார்.
"எச்சரிக்கைகளுக்கு செவிசாய்க்காததால் மக்கள் தங்கள் உயிரை இழக்கிறார்கள்" என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
NSW SES 37 வெள்ள மீட்புகள் உட்பட ஒரே இரவில் உதவிக்காக 482 கோரிக்கைகளைப் பெற்றதாக premier கூறினார்.
வார இறுதியில் பெய்த கனமழையால் NSW மாநிலம் முழுவதும் பல இடங்களில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
Dubbo, Lismore, Gunnedah மற்றும் Moree ஆகிய பகுதிகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டன.
"நியூ சவுத் வேல்ஸ் பகுதிகளில் 100 ஆண்டுகளில் இதுபோன்ற வெள்ளப்பெருக்கை காணாத Moree போன்ற இடங்களை நாங்கள் காண்கிறோம். இது கடினமான நேரம். வெள்ள நீர் வடிந்து செல்வதற்கும் நேரம் எடுக்கும்" என Premier Perrottet கூறினார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக Griffith விமான நிலையத்தை அதிகாரிகள் மூடியுள்ளனர். காலை 9 மணி வரையிலான 24 மணி நேரத்தில், கிட்டத்தட்ட 66 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளதாக உள்ளூராட்சி சபை தெரிவித்துள்ளது.
புதிய தாழமுக்கம் வார இறுதியில் NSWஐ தாக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், வாரத்தின் நடுப்பகுதியில் வானிலை ஓரளவு சீரடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விக்டோரியாவில் வெள்ள நிலைமைகள் சற்று தணிந்து வருகின்றன. ஆனால் VIC SES Chief Operations Officer Tim Wiebusch கூறுகையில், தற்போது மாநிலம் வெள்ள அவசரநிலையில் உள்ளது என்றார்.
Echuca மற்றும் Kerangஇல் மேலும் 30 மிமீ மழை பெய்துள்ளதாக பணியகத்தின் மூத்த வானிலை ஆய்வாளர் Kevin Parkyn கூறியுள்ளார்.
மாநிலம் முழுவதும் அதிக மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று பணியகம் எதிர்பார்க்கிறது என Parkyn கூறினார்.
"அதிர்ஷ்டவசமாக, கனமழையுடன் கூடிய கடுமையான வானிலை எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளது," என்று அவர் தெரிவித்தார்.
செவ்வாயன்று மற்றொரு வானிலை நிகழ்வு எதிர்பார்க்கப்படுவதாகவும், மெல்பனின் கிழக்கு புறநகர்ப் பகுதியிலிருந்து NSW எல்லை வரை பரவியுள்ள Gippslandஇல், மழை பெய்யக்கூடும் என்றும் Parkyn கூறினார்.
Murray ஆற்றின் அருகே உள்ள சமூகங்கள் (Swan Hill, Robinvale Mildura வரை) வெள்ளத்திற்குத் தயாராகி, வெள்ள அபாய எச்சரிக்கைகளைக் கவனிக்க வேண்டும் என்று VIC SES Chief Operations Officer Tim Wiebusch கூறினார்.
நவம்பர் முதல் வாரத்தில் Swan Hillஇல் பெரும் வெள்ளம் எதிர்பார்க்கப்படுகிறது எனவும் NSW எல்லையில் உள்ள Kerang மற்றும் Echuca ஆகிய இடங்களில் நீர்மட்டம் உச்சத்தை எட்டியிருக்கலாம் என்றும் Wiebusch கூறினார்.
Bureau of Meteorology, NSW SES, VIC SES ஆகிய இணையத்தளங்களைப் பார்ப்பதன் மூலம் சமீபத்திய தகவல்களைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
நீங்கள் உயிருக்கு ஆபத்தான அவசர சூழ்நிலையில் இருந்தால் 000 ஐ அழைக்கவும். புயல், காற்று, hail அல்லது மரங்கள் வீழ்ந்ததால் சேதம் ஏற்பட்டால் மற்றும் மரக்கிளை உங்கள் வீடு அல்லது ஆட்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்தால், NSW SES-ஐ 132 500 என்ற எண்ணிலும் Victoria Emergency Services-ஐ 1800 226 226 என்ற எண்ணிலும் அழைக்கவும்.
பிற மொழிகளில் இந்தத் தகவலைப்பெற மொழிபெயர்ப்பு மற்றும் மொழிபெயர்த்துரைப்பு சேவையை 131 450 என்ற எண்ணில் அழைத்து, VicEmergency Hotline ஐஅழைக்கச் சொல்லுங்கள்.
நீங்கள் காது கேளாதவராகவோ அல்லது பேச்சு/தொடர்புக் குறைபாடு உள்ளவராகவோ இருந்தால், 1800 555 677 என்ற எண்ணில் National Relay சேவையைத் தொடர்புகொண்டு, VicEmergency Hotline ஐ அழைக்கும்படி அவர்களிடம் கேளுங்கள்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.